திருப்பதி ஏழுமலையான் கோயிலில், மதிப்பு நீக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளின் காணிக்கை மூலம் 12 நாட்களில் 80 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. அதை மாற்றுவதற்கு தேவஸ்தான நிர்வாகிகள் அணுகியும் ரிசர்வ் வங்கி மறுப்பு தெரிவித்து வருகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப காணிக்கை செலுத்தி வருகின்றனர். அவ்வாறு செலுத்தப்பட்ட காணிக்கைகள் தினமும் கோயிலில் உள்ள பரக்காமணியில் எண்ணப்படுகிறது. இதில், தினமும் ரூ. 2 முதல் 3 கோடி வரை வருவாய் கிடைத்து வருகிறது. ஜனவரி 1 தேதி முதல் மார்ச் 31 தேதி வரை செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய ரூ 500, ரூ 1000 நோட்டுகளாக, பக்தர்கள் ரூ 15.5 கோடி காணிக்கை செலுத்தி உள்ளனர்.
இந்த ரூபாயை மாற்ற தேவஸ்தான நிர்வாகம் மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் பல முறை கடிதம் எழுதியும் ரிசர்வ் வங்கி மாற்ற முடியாது என தெரிவித்துள்ளது. இருப்பினும் தேவஸ்தானம் பழைய நோட்டுகளை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த மாதம் ஏப்ரல் 1 தேதி முதல் நேற்று வரை 12 நாட்களில் ரூ 80 லட்சம் பழைய ரூபாய் நோட்டுகளை பக்தர்கள் செலுத்தியிருப்பது தேவஸ்தானத்திற்கு மேலும் சுமையை ஏற்றிவருகிறது.