Karnataka election
Karnataka election File image
இந்தியா

களைகட்டும் கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பழைய மைசூருவின் அரசியல் பின்னணி!

PT WEB

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முடிவில் ஆட்சியை பாரதிய ஜனதா தக்க வைக்குமா, காங்கிரஸ் கைப்பற்றுமா அல்லது தொங்கு சட்டசபையா என நண்பகலுக்குள் தெரிய வரும். இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள 6 பகுதிகளில் முக்கியமான பழைய மைசூருவின் அரசியல் பின்னணி குறித்து தற்போது பார்க்கலாம்.

கர்நாடகாவின் 6 பகுதிகளில் அதிக தொகுதிகளைக் கொண்ட பகுதி பழைய மைசூரு. இங்கு 51 தொகுதிகள் உள்ளன. மைசூரு மகாராஜாக்கள் ஆண்ட பகுதியைக் கொண்டுள்ளதால், பழைய மைசூரு என இப்பகுதி அழைக்கப்படுகிறது. இங்கு காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதா தளமும் செல்வாக்குமிக்க கட்சிகள் என்பதை கடந்த 3 தேர்தல்களின் முடிவுகள் உணர்த்துகின்றன.

Karnataka Elections

* 2008-இல், காங்கிரஸ் 26 இடங்களிலும் மதசார்பற்ற ஜனதா தளம் 15 இடங்களிலும் வென்றிருந்தன. 2008-இல், பாஜக மொத்தமாக தனிப்பெரும்பான்மை பெற்றபோதும், இப்பகுதியில் 7 இடங்களை மட்டுமே வென்றது. பிற கட்சிகள் 3 இடங்களைக் கைப்பற்றின.

* 2013-இல், காங்கிரஸ் 24 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 21 இடங்களிலும் வென்றன. பாஜக 2 இடங்களிலும், பிற கட்சிகள் 4இடங்களிலும் வெற்றிபெற்றன.

* 2018 தேர்தலில், பிற பகுதிகளில் பாஜக அதிக இடங்களை வென்றபோதும், பழைய மைசூருவில் 9 இடங்களை மட்டுமே அக்கட்சி வென்றது. இங்கு, மதசார்பற்ற ஜனதா தளம் 24 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும் வென்றிருந்தன. பிற கட்சிகள் 2 இடத்தில் வென்றன.

பழைய மைசூரு பகுதியில், தேவகவுடாவின் ஒக்கலிகா சமூகத்தினர் பெரும்பான்மையாக இருப்பதால், மதசார்பற்ற ஜனதா தளத்தின் கோட்டையாக இப்பகுதி விளங்குகிறது.

காங்கிரஸ் வென்றால் முதல்வராக வாய்ப்புள்ளவர் என கருதப்படும் சித்தராமையா, காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வரா ஆகிய 2 பேருமே இப்பகுதியில்தான் தேர்தல் களம் கண்டுள்ளனர்.

மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரான குமாரசாமியின் சகோதரர் ரேவண்ணாவும் இங்கிருந்துதான் களம் காண்கிறார்.

Karnataka

தேவகவுடாவின் சொந்த ஊரான ஹசனில், அவரது மூத்த மருமகள் பவானி போட்டியிட விரும்பிய நிலையில், வேறு ஒருவருக்கு கட்சித் தலைவர் குமாரசாமி வாய்ப்பளித்துள்ளது இங்கு சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. அதிக தொகுதிகளையும், முக்கிய வேட்பாளர்களையும் கொண்டுள்ளதால், பழைய மைசூரு பகுதி இத்தேர்தலில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.