பீகாரில் கடந்த 30 ஆண்டுகளாக தனியொருவராக கால்வாய் வெட்டி கிராமத்திற்கு தண்ணீர் கொண்டு வந்த முதியவருக்கு ஆனந்த் மஹிந்த்ரா டிராக்டரை பரிசாக வழங்கி கெளரவித்துள்ளது பாராட்டுகளைக் குவித்துள்ளது.
பீகார் மாநிலம் கொத்திவாலா கிராமத்தில் லாயுங்கி புய்யான் என்ற முதியவர் வசித்து வருகிறார். நீர் தட்டுப்பாடுக் கொண்டது இவரது கிராமம். இதனால், இவர் வளர்த்துவரும் கால்நடைகளுக்கு காட்டிலிருந்தே நீர் கொண்டுவரும் சூழல் இருந்துள்ளது.
என்னப் பண்ணலாம் என்று யோசித்தார் லாயுங்கி. காட்டின் மலைப் பகுதியில் இருக்கும் நீர் வீணாக ஆற்றில் கலப்பதை கண்டவர், அதனை தனது கிராமத்திற்கு கொண்டுவரலாம் என்று நினைத்து கிராமத்தினரின் உதவியை நாடினார்.
ஆனால், யாரும் உதவ முன்வராததால் தனியொருவராக களத்தில் இறங்கி கடந்த 30 ஆண்டுகளாக மண்வெட்டியும் கைகளையுமே ஆயுதமாகக் கொண்டு கால்வாய் வெட்டினார்.
அவரின் கடும் முயற்சி வீண்போகவில்லை. விளைவு மலைப்பகுதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் கிராமத்திற்கு தண்ணீர் வர ஆரம்பித்துவிட்டது. இதனால், இந்தியா முழுக்க பிரபலமானார் லாயுங்கி.
விவசாயமும் கால்நடைகளையுமே மட்டுமே நம்பியுள்ள லாயுங்கி தனக்கு ஒரு டிராக்டர் இருந்தால் சந்தோஷம் என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தது ட்விட்டரில் வைரலானது.
இத்தகவலைக் கேள்விப்பட்ட மஹிந்த்ரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா உடனடியாக லாயுங்கிக்கு டிராக்டரை பரிசாக கொடுத்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். ஆனந்த் மகிந்திரா சமூக வலைதளங்கள் மூலம் பல்வேறு சேவைகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.