இந்தியா

பசுவை மருத்துவரிடம் அழைத்துச்சென்ற முதியவர் கை உடைப்பு

webteam

உத்தரப்பிரதேசத்தில் பசுமாட்டை மருத்துவரிடம் அழைத்துச்சென்றவரை, இறச்சிக்காக விற்க சென்றதாக நினைத்து ஒரு கும்பல் தாக்கியுள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் லக்ஷ்மணபூர் கிராமத்தில் வசிப்பவர் கைலாஷ்நாத் சுக்லா (70). இவரது பசு மாட்டிற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் பசுவை பக்கத்து ஊரிலிருந்த கால்நடை மருத்துவரிடம் அழைத்துச்சென்றுள்ளார். செல்லும்போது அச்சன்பூர் என்ற இடத்தில் அவரை ஒரு கும்பல் சூழ்ந்தது. அவர் ஏன் என்னை மறிக்கின்றீர்கள்? எனக் கேட்பதற்குள், அந்தக் கும்பல் மாட்டை எங்கே அழைத்துப்போகிறாய் என தாக்கியுள்ளது. அப்போது கூட்டத்தில் ஒருவர், இவர் மாட்டை பக்கத்து ஊரில் உள்ள இஸ்லாமியர்களிடம் இறைச்சிக்காக விற்கப்போகிறார் என சத்தம்போட்டுள்ளார். 

இதையடுத்து அந்தக் கும்பல் சரமாரியாக அந்த முதியவரை தாக்கியுள்ளது. பின்னர் அவருக்கு மொட்டையடித்து,கறுப்புச் சாயம் பூசி, சங்கிலியால் கட்டி தெருத்தெருவாக அந்தக் கும்பல் இழுத்துச் சென்றுள்ளது. இதற்கிடையே அந்த முதியவர் தான் ஒரு பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர், அதனால் பசுவை இறைச்சிக்கு விற்கமாட்டேன். நான் மருத்துவரிடம் அழைத்துச்செல்கிறேன் எனக்கூறியுள்ளார். அவர் கூறியது எதையும் காதில் வாங்காத அந்தக் கும்பல் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபட்டுள்ளது. இதில் கை உடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்கள் 4 பேரும் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆரம்பித்த இந்து யுவ வாஹினியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.