crude oil  reuters
இந்தியா

தொடர்ந்து 4-வது நாளாக சரியும் கச்சா எண்ணெய் விலை.. இந்தியாவுக்கு என்ன லாபம்?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் போர் விரைவில் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து நான்காவது நாளாக குறைந்துள்ளது.

PT WEB

செய்தியாளர் - M.மீரா

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் குடியரசுக் கட்சி, சமீபத்தில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதனால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஜனநாயகக் கட்சியினரின் செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, ஈரான் மீதான ராணுவ நடவடிக்கைகளைத் தொடர்வதில் ட்ரம்புக்கு சிக்கல்கள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏற்படலாம் என்றும், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைக்கு அவர் முன்வரலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

TRUMP

இதன் எதிரொலியாக, இன்றைய நிலவரப்படி பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.85 சதவீதம் குறைந்து ஒரு பேரல் 93.82 டாலராகவும், அமெரிக்காவின் WTI கச்சா எண்ணெய் விலை 1.36 சதவீதம் சரிந்து 86.92 டாலராகவும் இருக்கிறது.

ஈரான் போர் முடிவுக்கு வந்தால், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து சர்வதேச சந்தைக்கு எண்ணெய் விநியோகம் மீண்டும் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், சர்வதேச எண்ணெய் சந்தையில் மீண்டும் விநியோகம் அதிகரித்து, தேவை மற்றும் விநியோகத்தில் எஞ்சி நிற்கும் நிலை உருவாகியுள்ளதாக உலகின் முன்னணி நிதி மற்றும் முதலீட்டு வங்கி நிறுவனங்களில் ஒன்றான ஜேபி மோர்கன் தெரிவித்துள்ளது.

இருப்பினும், போர் முழுமையாக முடிவுக்கு வருமா என்பதில் இன்னும் உறுதியான நிலை இல்லை. ஈரான் தனது கோரிக்கைகளில் உறுதியாக இருப்பதால், அமெரிக்காவுடன் உடன்பாடு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைந்துள்ளதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர்.

crude oil

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிவது, இந்தியாவில் எரிபொருள் (பெட்ரோல், டீசல்) விலை குறைவதற்கான வாய்ப்புகளை கணிசமாக அதிகரிக்கிறது. ஆனால், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்திருப்பதால் அதன் நேரடிப் பலன் இந்திய மக்களுக்கு உடனடியாகக் கிடைக்காது. இந்த விலை வீழ்ச்சி இன்னும் சில வாரங்களுக்குத் தொடர்ந்து நீடித்தால் மட்டுமே, மத்திய அரசின் ஒப்புதலுடன் விலை குறைய வாய்ப்பிருக்கிறது.