இந்தியா

கேஸ் விற்பனையில் சரிவு.. ஆயில் நிறுவனங்களுக்கு ரூ22,000 கோடி மானியம் வழங்கும் மத்திய அரசு

ச. முத்துகிருஷ்ணன்

வீடுகளுக்கு விநியோகம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர் விற்பனையால் மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்ட இழப்பை ஈடுசெய்ய 22 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOCL), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (HPCL) ஆகிய மூன்று பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களும் வீட்டு உபயோகத்திற்கு விநியோகம் செய்யப்படும் கேஸ் சிலிண்டர்களை அரசாங்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட விலையில் நுகர்வோருக்கு விற்பனை செய்கின்றன.

சர்வதேச சந்தையில் ஜூன் 2020 முதல் ஜூன் 2022 வரையிலான கால கட்டத்தில் எல்பிஜியின் விலை 300 சதவீதம் வரை உயர்ந்த போதிலும், நுகர்வோருக்கான விலையில் 72 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. எல்பிஜியின் விலையில் பெருமளவு மாற்றம் செய்யாததால் எண்ணெய் நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2 ஆண்டுகளில் வீடுகளுக்கான கேஸ் சிலிண்டர்களை சர்வதேச சந்தை விலையை விட குறைவாக விலைக்கு விற்றதால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்ட மூன்று எண்ணெய் நிறுவனங்களுக்கு 22 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு மானியமாக வழங்க இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார்.