தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹிம், பாலியல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதையடுத்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் பதற்றம் பற்றிக்கொண்டிருக்கிறது.
ஹரியானா மாநிலத்தின் பஞ்ச்குலா பகுதியில் நடைபெற்ற கலவரத்தில் 28 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 250 பேர் பலியானதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
2002 ஆம் ஆண்டு இரண்டு பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் பஞ்ச்குலா சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைமையிடமான சிர்சாவில் இருந்து காலை 9:00 மணிக்கு குர்மீத் ராம் ரஹிம் காரில் புறப்பட்டார். நூற்றுக்கணக்கான வாகனங்கள் பின்தொடர வரும் வழியெங்கும் சீடர்கள் முழக்கங்கள் இட, பஞ்ச்குலாவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திற்கு குர்மீத் ராம் ரஹிம் வந்தார். பிற்பகலில் தீர்ப்பு வழங்கிய சிபிஐ நீதிபதி ஜக்தீப் சிங், குர்மீத் ராம் ரஹிம் குற்றவாளி என்று தீர்ப்பளித்தார். தீர்ப்பின் விவரங்கள் வரும் 28 ஆம் தேதி வெளியிடப்படும் என்று அவர் அறிவித்தார். இந்த குற்றத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தீர்ப்பையடுத்து நீதிமன்றத்தின் வெளியே இருந்த சீடர்கள் கடும் வன்முறையில் ஈடுபட்டனர். தொலைக்காட்சி ஊடக ஒளிபரப்பு வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பஞ்சாப் ரயில் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டது. பஞ்சாபில் உள்ள ஏராளமான பெட்ரோல் பங்க்-கள் கொளுத்தப்பட்டன.
கலவரக்காரர்களை அடக்க கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டன. துணை ராணுவப்படையினர் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர பெரு முயற்சி செய்தனர். ஆண்கள் மட்டும் இன்றி பெண்களும் கம்புகளுடன் வன்முறை செயல்களில் ஈடுபட்டுள்ளனர். பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் வெடித்த கலவரம் டெல்லியின் எல்லைவரை எட்டியுள்ளது. இதையடுத்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அவசர ஆலோசனை நடத்தியுள்ளார்.