இந்தியா

`கவிதை நயத்தோடு பாருங்க’- சாவர்க்கர் பறவையில் பயணித்ததாக இருந்த பாடத்துக்கு புது விளக்கம்!

நிவேதா ஜெகராஜா

கர்நாடகாவில் 8-ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்க்கர் பற்றி இடம்பெற்றுள்ள கருத்து அரசியலில் சர்ச்சை எழுந்துள்ளது.

கர்நாடக பாடப் புத்தகத்தில் `காலத்தை வென்றவர்கள்’ எனப் பெயரிடப்பட்ட புதிய பாடப்பகுதியில், சாவர்க்கர் யார் என்பதை மாணவர்களுக்கு விளக்கும் வகையில் “1911-1924 ஆண்டு வரை சாவர்க்கர் சிறையில் இருந்தபோது அவருடைய வாழ்வு எவ்வாறு இருந்தது என்பது குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இதில், `சிறையில் இருந்த சாவர்க்கர் ஒரு பறவையின் மீது ஏறி சிறையிலிருந்து தனது தாய்நாட்டுக்கு (இந்தியா) வந்து செல்வார். தாய்நாட்டை தரிசிப்பதற்காக அவர் இவ்வாறு செய்வார்” என எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் “சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த சிறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை. ஆனால் அந்த அறைக்கு அன்றாடம் புல்புல் பறவைகள் வந்து செல்வதுண்டு. சாவர்க்கர் அந்த புல்புல் பறவையில் இறகுகளில் ஏறி ஒவ்வொருநாளும் தன் தாய்நாட்டை தரிசித்து வருவார்" என்று கூறப்பட்டிருந்தது.

`இப்படி கற்பனையில் ஒரு விஷயத்தை குறிப்பிடுவதை எப்படி மாணவர்களுக்கு கற்பிக்க முடியும்?’ என்று இதற்கு அரசியல் கட்சியினரும், குழந்தைகள் நல செயற்பாட்டாளர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாடபுத்தகத்தை வடிவமைத்த குழுவினர், “அந்த வரிகள் கவித்துவமாக சொல்லப்பட்டது. சிலரால் அதை புரிந்துகொண்டு ரசிக்கத் தெரியவில்லை.

அவர்களுக்கு இதை தகுந்த அளவில் புரிந்துகொள்ள அறிவாற்றல் இல்லையே என்பது அதிசயமாக இருக்கிறது" என குறிப்பிட்டுள்ளனர். மேலும் “சாவர்க்கர் பறவைமீது ஏறிப் பறந்தார் என்பதை அப்படியே பொருள்கொள்ளாமல் கவிநயத்துடன் பார்க்க வேண்டும்” எனப் புத்தக வடிவமைப்புக்குழு குறிப்பிட்டுள்ளது.