இந்தியா

சபரிமலைக்கு சென்ற 7300 பேரில் வெறும் 200 பேரே உண்மையான பக்தர்கள் !

சபரிமலைக்கு சென்ற 7300 பேரில் வெறும் 200 பேரே உண்மையான பக்தர்கள் !

Rasus

சபரிமலையில் சிறப்பு பூஜைக்காக கடந்த இரண்டு நாட்கள் நடை திறக்கப்பட்ட நிலையில் அங்கு சென்ற 7300 பேரில் வெறும் 200 பேரே உண்மையான பக்தர்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என உச்சநீதிமன்றம் அண்மையில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் போராட்டம் வெடித்தது. ஆகவே அப்பகுதிகளில் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பின் கடந்த மாதம் 17-ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. அப்போது 10 முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் போராட்டம் நடைபெற்றது. இதனால் சபரிமலைக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில் சித்திரை ஆட்டத் திருநாள் பூஜைக்காக கடந்த திங்கள், மற்றும் செவ்வாய்கிழமை சபரிமலை கோயிலின் நடை திறக்கப்பட்டது. இதில் மொத்தமாக 7300 பேர் சபரிமலைக்கு சென்றுள்ளனர். ஆனால் உண்மையான பக்தர்கள் வெறும் 200 பேர் என போலீசார் தரப்பில் சொல்லப்படுகிறது. மற்ற 7100 பேரும் ஆர்எஸ்எஸ், பாஜக உள்ளிட்ட குழுவை சேர்ந்தவர்கள் என்றே சொல்லப்படுகிறது. இதில் 200 பேர் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றவர்கள் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படும்போது, “ பிரச்னைகள் ஏற்படுத்துபவர்களை கண்டுபிடிக்க முக அடையாளத்தை அறியும் மென்பொருள் பயன்படுத்தப்பட்டது. இதில் கடந்த மாதம் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் பலர் இந்த முறை சபரிமலைக்கு சென்றது தெரியவந்துள்ளது” என கூறுகின்றனர். நவம்பர் 16-ஆம் தேதி மண்டல பூஜைக்காக மீண்டும் சபரிமலை நடை திறக்கப்பட உள்ள நிலையில் அந்த சமயம் பலத்த பாதுகாப்புகளை ஏற்பாடு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சபரிமலை விவகாரம் தொடர்பாக மாநிலம் முழுவதும் போலீசார் இதுவரை 3,741 பேரை கைது செய்துள்ளனர். அத்துடன் 550 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Courtesy: The Times of India