இந்தியா

மனைவி மீது ஆசிட் வீசிய காதல் கணவன்... 6 நாள் போராட்டத்திற்கு பிறகு பரிதாபமாக பலி!

Rishan Vengai

ஒடிசா மாநிலத்தில் காதல் திருமணம் செய்த சில நாட்களிலேயே மனைவி மீது கணவன் ஆசிட் வீசி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் கடந்த 20ஆம் தேதி ஆசிட் அடிக்கப்பட்டு 80% தீக்காயங்களுடன் 20 வயது நிரம்பிய பெண் ஒருவர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் இந்த சம்பவம் போலீஸ் வழக்காக மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. போலீஸார் தரப்பில் விசாரிக்கப்பட்ட போது, அந்த பெண் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பிம்பூர் கிராமத்தைச் சேர்ந்த சந்தன் ராணா என்பவரின் மனைவி பனிதா ராணா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் அடுத்தகட்ட விசாரணையில், பாலசோர் மாவட்டம் சஹதேபகுண்டா பகுதியைச் சேர்ந்த சந்தன் ராணா என்பவரும், பனிதாவும் காதலித்து மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். காதல் திருமணத்தில் மிகுந்த சந்தோசத்தோடு இருந்த பனிதாவிற்கு, சில நாட்களிலேயே கணவனை பற்றிய திடுக்கிடும் விஷயங்கள் தெரியவந்துள்ளன.

தன்னுடைய கணவனான சந்தன் ராணாவிற்கு, தன்னுடன் திருமணமாவதற்கு முன்பாகவே ஏற்கனவே திருமணமாகிவிட்டதும், அந்த திருமணத்தில் அவருக்கும் முதல் மனைவிக்கும் இரண்டு குழந்தைகள் இருப்பதும் பனிதாவுக்கு தெரியவந்துள்ளது.

இந்நிலையில் கணவனின் ஏமாற்றுவேலை தெரிந்ததும், சந்தன் ராணாவுடன் சண்டைபிடித்த பனிதா, இனிமேல் உன்னுடன் வாழமாட்டேன் என கூறிவிட்டு பெற்றோர் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் கோபமடைந்த சந்தன் ராணா, பனிதாவை சமாதானம் செய்து அழைத்து வரும்படி பேசுவதற்காக அவரை பார்க்க சென்றுள்ளார். அருகிலுள்ள பீமாபுரா கிராமத்தில் உள்ள தனது மூத்த சகோதரியின் வீட்டிற்கு பனிதா சென்றிருந்த நிலையில், திடீரென அங்கு வந்த சாந்தன், பனிதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

பேச்சுவார்த்தை சண்டையாக முற்றிய நிலையில், பனிதா மீது சாந்தன் திடீரென ஆசிட் எடுத்து வீசியுள்ளார். ஆசிட் வீச்சில் 80 சதவீதம் தீக்காயம் ஏற்பட்ட பனிதா வலியில் துடித்துள்ளார். மோசமான இந்த தாக்குதலில் பனிதா மட்டுமல்லாமல், பனிதாவின் மூத்த சகோதரி மீதும், அவரது இரண்டு குழந்தைகள் மீதும் ஆசிட் தெறித்து வலியில் துடித்துள்ளனர்.

80% தீக்காயங்களுடன் கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஆறு நாட்களாக உயிருக்குப் போராடி வந்த பனிதா, ஞாயிற்றுக்கிழமையான நேற்று மரணித்துள்ளார். சம்பவம் நடந்து 7 நாட்களாகியும் பனிதாவின் கணவன் சந்தன் ராணாவை பிடிக்கமுடியாமல், போலீசார் தேடிவருகின்றனர்.