ஒடிஷா ரயில் விபத்து
ஒடிஷா ரயில் விபத்து file image
இந்தியா

”சிக்னல் தவறாக கொடுத்தது காரணமா?”-ஒடிசா ரயில் விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

Prakash J

ஒடிஷா மாநிலம் பாலசோர் மாவட்டம் பாஹாநாகா பஜார் ரயில் நிலையம் அருகே நேற்று (ஜூன் 2) இரவு 7 மணி அளவில் கோர ரயில் விபத்து ஏற்பட்டு நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விபத்தில் மொத்தம் 3 ரயில்கள் மற்றும் 4 தண்டவாளங்கள் சம்பந்தப்பட்டிருக்கின்றன. விபத்து எப்படி நடந்தது என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வரவில்லை. சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தவறுதலாக சரக்கு ரயில் மீது மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. பின்னர், கவிழ்ந்து கிடந்த கோரமண்டல் ரயில் மீது பெங்களூரில் இருந்து ஹவுரா நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் மோதி முழு கோர விபத்தும் நடந்தேறியுள்ளதாக கூறப்படுகிறது.

கண்ணிமைக்கும் நேரத்தில் அடுத்தடுத்து நேர்ந்த இந்த கோர நிகழ்வில்  பெட்டிகள் கடுமையாக மோதிக்கொண்டதில் பெரும் சேதம் ஏற்பட்டது. சில பெட்டிகள் ஒன்றன்மேல் ஒன்றாக ஏறின. சில பெட்டிகள் தலைகீழாக கவிழ்ந்தன. பெட்டிகளின் இடிபாடுகளில் சிக்கி பலர் இறந்தனர். இந்த ரயில் விபத்தில், தற்போதுவரை 230க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும், 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் ஒடிசாவிலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த ரயில்வே அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. அதேநேரத்தில் இவ்விபத்துக்கான காரணம் குறித்து சில தகவல்களும் வெளியாகி உள்ளன. தவறான சிக்னல் கொடுத்ததே விபத்துக்கு காரணம் என ரயில்வே அதிகாரிகள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளி வந்துள்ளது. சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு, உடனடியாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதாவது, மெயின் லைனுக்குச் செல்ல வேண்டிய கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு, பச்சை சிக்னல் ரத்தானதால் லூப் லைனில் சென்று சரக்கு ரயில் மீது மோதியுள்ளது. லூப் லைனில் நிறுத்தப்பட்டிருந்த சரக்கு ரயில் மீது வேகமாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மோதியதால் பெட்டிகள் தடம்புரண்டன. சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு பச்சை சிக்னல் கொடுத்துவிட்டு உடனடியாக அதை ரத்து செய்ததால் விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.