ஒடிசா ரயில் விபத்து
ஒடிசா ரயில் விபத்து twitter page
இந்தியா

”பொறுப்பற்ற நிர்வாகமே விபத்திற்கு காரணம்” - ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

Jayashree A

ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்திற்கு தார்மீக பொறுப்பு ஏற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அதேபோல், பாரதிய ஜனதா தரப்பிலும் இதுதொடர்பாக கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

பாரதிய ஜனதாகட்சியினை சேர்ந்த திருப்பதி நாராயணன் இந்த விபத்து குறித்து கருத்து தெரிவிக்கையில், ”மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் இதற்காக பதவி விலகவேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. இந்த விபத்திற்கு யார் காரணம்? எப்படி விபத்து ஏற்பட்டது? என்பதை கண்டாராய்ந்து இனிமேல் இது போன்ற விபத்து நிகழாமல் இருக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். விபத்திற்கு காரணமானவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இந்த விபத்து குறித்து காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற குழு உறுப்பினர் திரு.செல்வபெருந்தகையின் கருத்து,

”இந்த விபத்திற்கு தார்மீக பொறுப்பேற்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்னவ் பதவி விலக வேண்டும். அப்படி முடியாதென்றால் அவருக்கு வெறித்தனமான பதவி ஆசையானது உள்ளது என்று அர்த்தம்.

பா.ஜ.க இதுவரை உருப்படியாக எதுவும் செய்யவில்லை. விளம்பரம் செய்வது அதன் மூலம் ஆதாயம் பெறுவது, இதில் தான் கவனம் செலுத்துகிறார்கள்” என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் முத்தரசன் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில்,

”இது எதிர்பாராத விபத்து இல்லை. இது பொறுப்பற்று நடந்து கொண்ட காரணத்தினால் ஏற்பட்ட விபத்து இது” என்றார்.