பிரகாஷ் போய் எக்ஸ் தளம்
இந்தியா

ஒடிசா | மருத்துவ விடுப்பு மறுப்பு.. ட்ரிப்ஸ் பாட்டிலுடன் பள்ளிக்குச் சென்ற ஆசிரியர்!

ஒடிசாவில் ஆசிரியர் ஒருவருக்கு மருத்துவ விடுப்பு மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரிப்ஸ் பாட்டிலுடன் பள்ளிக்குச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Prakash J

ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், பிரகாஷ் போய். இவர், அங்குள்ள பைன்சா ஆதர்ஷா வித்யாலயாவில் கணித ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் தனது தாத்தாவின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள மார்ச் 6ஆம் தேதி பயணம் செய்திருந்தார். பின்னர், பிரகாஷ் போய் எதார்த்தமாக நோய்வாய்ப்பட மருத்துவ விடுப்புக்கு விண்ணப்பித்துள்ளார். ஆனால், அவருடைய மருத்துவ விடுப்பு விண்ணப்பத்தை பள்ளியின் முதல்வர் பிஜயலக்ஷ்மி பிரதான் நிராகரித்துள்ளார். மேலும், பாலங்கிரில் உள்ள மாவட்ட கல்வி அதிகாரி (DEO) மற்றும் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் (DPC) ஆகியோரிடமும் புகார் அளித்துள்ளார்.

பிரகாஷ் போய்

இதுதொடர்பாக பிரகாஷ் போய், "என் தாத்தா இறந்த பிறகு, எனக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் விடுப்புக்கு விண்ணப்பித்தேன். ஆனால் பள்ளி முதல்வர் அதை மறுத்து, டிபிசி அதிகாரிகளைச் சென்று பார்க்கச் சொன்னார். தொடர்ந்து என் விடுப்புக்கு மறுப்பு தெரிவித்த அவர், என் உடல்நிலையைப் பற்றியும் கேட்கவில்லை. பள்ளியின் உத்தரவுகளையே பின்பற்றச் சொன்னார். தேர்வுக்கான தயாரிப்புகளுக்காக பள்ளிக்கு உடனே செல்ல உத்தரவிட்டார். இதனால், வேறு வழியின்றி, பள்ளிக்குச் சென்றேன். பள்ளிக்கு வருவதற்கு முன்பு, ஒரு மருத்துவரை சந்தித்தேன். அவர் எனக்கு உடல்நிலை சரியில்லாததால் ட்ரிப்ஸ் ஏற்றினார். இதனால் அந்த ட்ரிப்ஸ் பாட்டில் மூலமே நான் பள்ளிக்கு வர வேண்டியதாயிற்று. எனக்கு மருத்துவ விடுப்பு மறுக்கப்படுவது இது முதல்முறை அல்ல. விடுப்பு விஷயத்தில் அவர் எப்போதும் பாரபட்சம் காட்டுகிறார். மற்ற ஆசிரியர்களுக்கு எளிதாகவும் விரைவாகவும் விடுப்புகள் கிடைக்கின்றன. ஆனால் எனக்கு மட்டும் மறுக்கப்படுகிறது. இதனால், மனரீதியாக துன்புறுத்தப்படுகிறேன்" என பள்ளி முதல்வர் மீது அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பின்னர் அவர் பள்ளியை அடைந்ததும், சக ஊழியர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து பதிலளித்த பட்னகர் தொகுதி கல்வி அதிகாரி (BEO) பிரசாத் மஜ்ஹி, ”இதுதொடர்பாக விசாரணை நடத்தப்படும். குற்றம்சாட்டப்பட்டவர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் அந்த மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.