Odisha School
Odisha School File Photo
இந்தியா

சுட்டெரிக்கும் கோடை... பள்ளிகளுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை அறிவித்தது ஒடிசா அரசு!

Justindurai S

இந்தியாவில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் கடந்த இரண்டு வாரங்களாக கோடை வெயில் கொடூரமாக அடித்து வருகிறது. மாநிலத்தில் 30 இடங்களில் நேற்று (புதன்கிழமை) அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸுக்கு மேல் பதிவாகியுள்ளது. மாநிலத்தில் அதிகபட்சமாக பரிபாடாவில் 44.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

அதிகரித்து வரும் வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு ஒடிசா மாநில அரசு ஏற்கெனவே ஏப்ரல் 12 முதல் 16 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்தது. பின் ஏப்ரல் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால் ஏப்ரல் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

இந்த நிலையில், வெப்ப அலை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, ஒடிசா அரசு முன்கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்து உள்ளது. இதன்படி ஒடிசாவில் உள்ள அனைத்து அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களுக்கும் நாளை முதல் (ஏப்ரல் 21) கோடை விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக வெப்ப அலை பரவலை கருத்தில்கொண்டு அதனை எதிர்கொள்ள, பணி நேரங்களை மாற்றியமைத்து கொள்ளும்படி மாநில அரசுகளிடம், மத்திய அரசு கேட்டு கொண்டது குறிப்பிடத்தக்கது.