மோகன் மாஜி PTI, meta ai
இந்தியா

தனியார் நிறுவனங்களில் வேலை நேரம் அதிகரிப்பு.. ஒடிசா அமைச்சரவை ஒப்புதல்!

ஒடிசா மாநிலத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிப்பதற்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Prakash J

ஒடிசா மாநிலத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிப்பதற்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

பணி நேரம் குறித்து பேச்சுகளும், கருத்துகளும் கடந்த சில மாதங்களாகவே நாடு முழுவதும் விவாதிக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், தனியார் நிறுவனங்களில் பணி நேரம் மாநில அரசால் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தில் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வேலை நேரத்தை 10 மணி நேரமாக அதிகரிப்பதற்கு அந்த மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக முதல்வர் மோகன் மாஜி தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டம் மற்றும் தொழிற்சாலைகள் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்வதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

model image

அதன்படி, இந்த திருத்தங்களில் தினசரி வேலை நேரத்தை 9 மணி நேரத்திலிருந்து 10 மணி நேரமாக நீட்டிப்பதும், வாராந்திர வேலை நேரத்தை 48 மணி நேரமாக வைத்திருப்பதும் அடங்கும். மேலும், கூடுதல் நேர வேலை வரம்பு மூன்று மாத காலத்திற்கு 50 மணி நேரத்திலிருந்து 144 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு நிறுவனத்தில் குறைந்தபட்சம் 3 பெண்களை அவர்களின் சம்மதத்துடன் இரவு பணியில் ஈடுபடுத்தும் வகையிலும் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தப் புதிய விதிகள் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குப் பொருந்தும் எனவும், ஆறு தொடர்ச்சியான மணிநேர வேலைக்குப் பிறகு ஊழியர்கள் குறைந்தது 30 நிமிடங்கள் ஓய்வெடுக்க உரிமை உண்டு எனவும், கூடுதல் நேரத்திற்கு, ஒருநாளைக்கு 10 மணிநேரம் அல்லது வாரத்திற்கு 48 மணிநேரத்திற்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் வழக்கமான ஊதியத்தைவிட இரு மடங்கு பெறுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோகன் மாஜி

மேலும், இந்தச் சீர்திருத்தங்கள் புதிய முதலீடுகளை ஈர்க்கும் என்றும், தொழிற்சாலைகள் உச்ச தேவையை பூர்த்தி செய்ய உதவும் என்றும், உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்றும் அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே இதேபோன்ற நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ள கர்நாடகா, தமிழ்நாடு, தெலங்கானா, உத்தரப்பிரதேசம், திரிபுரா மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுடன் ஒடிசாவும் இணைந்துள்ளது