ஒடிசாவின் கட்டாக்கில், துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தில் வன்முறை வெடித்த நிலையில்144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
வடமாநிலங்களில் நவராத்திரி பண்டிகையானது, ’துர்கா பூஜை’ என்ற பெயரில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்தப் பண்டிகையின்போது, துர்கா சிலையை வைத்து வழிபடுவர். பின்னர், அந்தச் சிலைகள் நீர்நிலைகளில் கரைக்கப்படும். இந்த நிலையில், ஒடிசாவின் கட்டாக்கில், துர்கா சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது வன்முறை வெடித்த நிலையில், அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கட்டாக்கில், கடந்த 3ஆம் தேதி இரவு ஹாத்தி போகாரி அருகே துர்கா பூஜை ஊர்வலத்தின்போது, அதிக சத்தத்துடன் இசைக் கருவிகளை இசைத்ததாக இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதனால் இருதரப்பினரும், ஒருவரையொருவர் கற்களால் தாக்கிக்கொண்டனர். மேலும், கட்டாக் நிர்வாகத்தின் உத்தரவை மீறி, விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில், பித்யாதர்பூர் முதல் வன்முறை நடந்த ஹாத்தி போகாரி வரை இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது.
இதை போலீசார் தடுத்து நிறுத்த முயன்றனர். அப்போது பேரணியினர் போலீசார் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசி எறிந்தனர். மேலும் அவர்கள் அங்குள்ள கடைகளுக்கு தீ வைத்தனர். தவிர, அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமராக்களையும் சேதப்படுத்தினர்.
இது, வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து, போலீசார் கண்ணீர்ப் புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி அவர்களைக் கலைத்தனர். இதையடுத்து, கட்டாக்கில் உள்ள தர்கா பஜார், மங்களாபாக், கன்டோன்மென்ட், பூரிகாட், லால்பாக் உட்பட 13 போலீஸ் ஸ்டேஷன்களின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மேலும், சமூக ஊடகங்களில் வதந்தி பரவுவதை தடுக்க, கட்டாக் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், இணையச் சேவை முடக்கி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த வன்முறை தொடர்பாக, இதுவரை ஆறு நபர்களை போலீசார் கைது செய்துள்ளனர், மேலும் சந்தேக நபர்களை அடையாளம் காண சிசிடிவி மற்றும் ட்ரோன் காட்சிகளை ஆராய்ந்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வன்முறை சம்பவங்களைத் தடுக்க பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டு ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.