இந்தியா

மத்தியப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் கமல்நாத்

மத்தியப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்றார் கமல்நாத்

webteam

மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல்நாத் இன்று பதவி ஏற்றுக்கொண்டார்.

மத்தியப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 230 தொகுதிகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களில் வெற்றி பெற்றது. பாரதிய ஜனதா 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் 2 இடங்களிலும், சுயேச்சைகள் 4 இடங்களிலும் சமாஜ் வாதி 1 இடத்தில் வெற்றி கண்டன. ஆட்சியமைக்க 116 தொகுதிகள் தேவை என்ற நிலையில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் 2 இடங்களில் வெற்றி கண்ட பகுஜன் சமாஜ், 1 இடத்தில் வெற்றி பெற்ற சமாஜ் வாதி ஆகியவை காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்தது. இதனால் பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்தால், காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைப்பது உறுதியானது.

இதனையடுத்து முதலமைச்சருக்கான போட்டியில் மூத்த தலைவர் கமல்நாத் மற்றும் ராகுல் காந்திக்கு நெருக்கமான இளம் தலைவர் ஜோதிராதித்யா சிந்தியாவுக்கும் இடையே போட்டி நிலவியது. பின்னர் எம்எல்ஏக்கள் ஆலோசனை கூட்டத்தில் கமல்நாத் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமல்நாத் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சராக இன்று பதவி ஏற்றுக்கொண்டார். மக்களவை எம்பி ஆக உள்ள கமல்நாத் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடவில்லை என்பதும், மத்தியப் பிரதேச மாநிலத்திலிருந்து 9 முறை மக்களவைக்கு தேர்வானவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

போபாலில் நடைப்பெற்ற இந்தப் பதவியேற்பு விழாவில் மத்தியப் பிரதேச மாநில கவர்னர் ஆளு‌ர் ஆனந்திபென் படேல் பதவி பிரமானம் செய்து வைத்தார். மேலும் இவ்விழாவில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர்கள் தேவகவுடா, மன்மோகன் சிங், திமுக தலைவர் மு.க ஸ்டாலின், ஆந்திர மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி, கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் சித்தராமையா, புதுச்சேரி மாநில முதலமைச்சர் நாராயணசாமி, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் அசோக் கெலாட், துணை முதல்வர் சச்சின் பைலட், ம.பி முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சொவுகான், காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், மல்லிகார்ஜுன் கார்கே, தேசிய மாநாடு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்கின்றனர். மேலும் எதிர்க்கட்சி மற்றும் கூட்டணியை கட்சியைச் சேர்ந்த தலைவர்களும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.