பசு குண்டர்களின் தாக்குதல்களுக்கு எதிராக கோவா மாட்டிறைச்சி விற்பனையாளர்கள் போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியில் இருந்து கோவாவிற்கு மாட்டிறைச்சி கொண்டுவரும் வாகனங்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து இந்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாட்டிறைச்சி வணிகர்கள் சங்க தலைவர் மன்னா பேபரி கூறுகையில், “தாக்குதல் சம்பவங்கள் நடைபெறாது என்று அரசு உறுதி அளிக்கப்படும் வரை நாங்கள் மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யமாட்டோம்” என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “கோவா மாநிலத்தில் நாள்தோறும் 2400 கிலோ மாட்டிறைச்சி விற்பனை செய்யப்படுகிறது. இதில் அரசு நடத்தும் கடைகள் மூலம் 2000 கிலோ மட்டும் தான் சப்ளை ஆகிறது. இதனால் விற்பனையாளர்கள் கர்நாடக மாநிலத்தில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாக்கப்படுகின்றனர். நாங்கள் மாட்டை வெட்டும் தொழில் செய்யவில்லை. நாங்கள் வணிகர்கள் தான். நாங்கள் பெலகாவி அல்லது அதன் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து மாட்டிறைச்சியை வாடிக்கையாளர்களுக்காக கொண்டு வருகிறோம். இதில் என்ன குற்றம் இருக்கிறது?
ஆடு உள்ளிட்ட இதர விலங்குகள் கோவாவில் இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் மாட்டிறைச்சியை மட்டும் குறி வைத்து மட்டும் தாக்குதல் நடத்தப்படுகிறது. பசு பாதுகாப்பு அமைப்பு ஒன்று புகார் அளித்ததன் பேரின் நேற்று பெல்காவியில் இருந்து மாட்டிறைச்சி கொண்டு வந்த வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியுள்ளனர். வாகனத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான மாட்டிறைச்சி இருந்தது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் சில அமைப்புகள் இத்தகைய செயலில் ஈடுபடுகின்றனர். இந்த விவகாரத்தில் அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.