இந்தியா

முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மீண்டும் முறையீடு: விசாரிக்க நீதிபதி மறுப்பு

webteam

முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பு மீண்டும் முறையிட்ட மனுவை விசாரிக்க நீதிபதி ரமணா மறுப்பு தெரிவித்துள்ளார். 

ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ மும்முரம் காட்டி வருகிறது. ஆனால் முன் ஜாமீன் கோரி ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதி ரமணா முன்பு விசாரணைக்கு வந்தது. ஆனால் அவர் உத்தரவு பிறப்பிக்க மறுப்பு தெரிவித்து விட்டார். 

மேலும் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு விசாரிக்கும் எனவும் பரிந்துரைத்தார். ஆனால் அயோத்தி வழக்கை விசாரித்து வருவதால் உடனடியாக முன் ஜாமீன் மனுவை விசாரிக்க முடியாது எனத் தலைமை நீதிபதியும் மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி அருண் மிஸ்ரா தலைமையில் இந்த மனு விசாரணைக்கு வரும் எனக் கூறப்பட்டது. 

இதைத்தொடர்ந்து முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் தரப்பு நீதிபதி ரமணாவிடம் மீண்டும் முறையிட்டது. அப்போது பேசிய வழக்கறிஞர் கபில் சிபல் எங்களுக்கு வேறு வழியில்லை. உங்களிடமே மீண்டும் வந்துள்ளோம் எனத் தெரிவித்தார். உங்களது மனுவில் பிழையுள்ளதாக பதிவாளர் தெரிவித்ததாக நீதிபதி ரமணா தெரிவித்தார்.

இதையடுத்து பிழைகள் திருத்தப்பட்டதாகவும் தற்போது சரியாக உள்ளது எனவும் பதிவாளர் நீதிபதியிடம் தெரிவித்தார். ஆனால் பட்டியலில் வராமல் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது எனவும் வழக்கு இன்றே பட்டியலிடப்படுவது தலைமை நீதிபதி கையில்தான் உள்ளது எனவும் தெரிவித்தார். 

4 மணிக்கு தான் தலைமை நீதிபதி அமர்வு முடியும் எனவும் அதற்குள் நீதிமன்றம் நேரம் முடிந்துவிடும் எனவும் கபில் சிபல் தெரிவித்தார். மேலும் சிதம்பரம் தப்பிச் செல்ல மாட்டார் என உறுதியளிப்பதாகவும் வழக்கை விசாரியுங்கள் எனவும் கபில் சிபல் முறையிட்டார். எனினும் எவ்வித இடைக்கால உபாயமும் வழங்க முடியாது என நீதிபதி உறுதியாக தெரிவித்து விட்டார். இதனால் இன்று சிதம்பரம் மனு மீதான விசாரணை நடைபெறுவதில் சிக்கல் எழுந்துள்ளது.