இந்தியா

“கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு பட்டாசு புகை குறைவுதான்” - கெஜ்ரிவால்

“கடந்த 5 ஆண்டுகளை விட இந்த ஆண்டு பட்டாசு புகை குறைவுதான்” - கெஜ்ரிவால்

webteam

கடந்த 5 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த வருடம் பட்டாசுக்களால் ஏற்பட்டுள்ள மாசின் அளவு குறைவுதான் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். 


தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் விமர்சையாக நேற்று கொண்டாடப்பட்டது. நீதிமன்றம் அனுமதித்த நேரத்தை கடந்தும், நாடு முழுவதும் பல இடங்களில் பட்டாசுகள் வெடிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக  டெல்லியிலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கூட அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட அதிகமாக பட்டாசுகள் வெடிக்கப்பட்டுள்ளன. இதனால் அந்தப் பகுதிகள் கடும் மாசுக் குறைபாடு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை எடுக்கப்பட்ட காற்று மாசு அளவீட்டின் படி, காஷியாபத்தில் 418 ஏக்யூஐ (AQI) நிலைக்கு மாசுபாடு கண்டறியப்பட்டிருக்கிறது. நொய்டா பகுதியில் 250 மற்றும் 379 அளவிற்கும், குருகிராம் அதை விடவும் மோசமான நிலையை அடைந்து 638 மற்றும் 668 அளவிற்கு சென்றிருக்கிறது. 

ஏக்யூஐ அளவீட்டின் படி காற்று மாசு என்பது, 0 முதல் 50 வரை இருந்தால் நன்று. 50 முதல் 100 வரை ஏற்றுக்கொள்ளத்தக்கது. 101 முதல் 200 வரை மிதமானது. 201 முதல் 300 வரை மோசமானது. 301 முதல் 400 வரை மிக மோசமானது. 401 முதல் 500 வரை அபாயகரமானது. 

தீபாவளி பண்டிகையையொட்டி டெல்லி நகரம் மிகுந்த புகைமூட்டமாக மாறியது. இதனால் பொதுமக்கள் அதிக சிரமத்திற்கு ஆளாகினர். இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “நேற்று ஞாயிற்றுக் கிழமை இரவு 8.30 மணி வரை உண்மையில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன்.  ஆனால் அதற்குப் பிறகு மக்கள் சிலர் வெடிகளை கொளுத்த ஆரம்பித்தனர். இந்த முறை காற்று மாசுப்பாட்டை பொருத்தளவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலவிய அளவைவிட குறைவுதான்” என பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது அவர் தெரிவித்தார்.

மேற்கொண்டு, “ஞாயிற்றுக் கிழமைகூட எரிக்கப்பட்ட பட்டாசுக்களின் அளவு குறைந்தேதான் இருந்தது. ஆனால் நாங்கள் முழுமையாக எப்படி நிறுத்துவது என்ற இலக்கை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறோம். டெங்கு காய்ச்சலை எங்கள் மாநிலத்தில் கட்டுப்படுத்தி இருப்பதை போல பட்டாசுகளால் உண்டாகும் மாசு இல்லாத நிலையையும் விரைவில் எட்டுவோம்” என்று அவர் கூறியிருக்கிறார்.