haryana violence
haryana violence  twitter
இந்தியா

வன்முறையால் பற்றி எரியும் ஹரியானா! 5 பேர் பலி, 70 பேர் காயம்! எங்கிருந்து தொடங்கியது.. பின்னணி என்ன?

Prakash J

ஹரியானாவில் நடைபெற்ற ஊர்வலம்

ஹரியானா மாநிலம் குருகிராம் - ஆல்வார் தேசிய நெடுஞ்சாலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிசேக ஊர்வலம் நடத்தப்பட்டது. நூஹ் மாவட்டத்தில் இந்த ஊர்வலத்தைத் தடுத்து நிறுத்திய இளைஞர்கள் சிலர், பேரணியில் இருந்தவர்களை கற்களை வீசித் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து நிகழ்ந்த வன்முறையில் கார்கள் தீக்கிரையாக்கப்பட்டன. வன்முறையில் 5 பேர் கொல்லப்பட்டனர். மேலும் போலீசார் உட்பட 70 பேர் காயமடைந்துள்ளனர் என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

haryana violence

வன்முறையால் ஆலயத்தில் தஞ்சமடைந்த மக்கள்!

காவல்துறையினர் கண்ணீர்புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியும், வானத்தை நோக்கி துப்பாக்கியில் சுட்டும் கலவரக்காரர்களை விரட்டினர். இந்த வன்முறை காரணமாக சுமார் 2,500 பேர் குருகிராம் அருகில் உள்ள ஆலயத்தில் தஞ்சமடைந்துள்ளனர். வன்முறையைத் தொடர்ந்து நூஹ் பகுதியில் இணையச் சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதிகமான மக்கள் கூடும் பொது நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

”ஹரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் ஏற்பட்ட வன்முறைக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இது மிகப் பெரிய சதி” என அம்மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.

”இது திட்டமிட்ட வன்முறைச் செயல்”

“மாநிலத்தில் அமைதியை நிலைநாட்டுமாறு அனைவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறேன். இதற்குப் பின்னணியில் இருப்பவர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்” என்று துணை முதல்வர் துஷ்யந்த் சவுதாலா தெரிவித்துள்ளார்.

நூஹ் மாவட்டத்தைச் சேர்ந்த எம்எல்ஏ அப்சல் அகமது, ”இந்த சம்பவம் திட்டமிட்ட வன்முறைச் செயல். கடந்த காலங்களில், இதுபோன்ற பயணங்கள் நடைபெற்றுள்ள போதும், வன்முறை எதுவும் நடைபெறவில்லை. சமூக ஊடகங்களில் வீடியோக்களை பதிவேற்றுவதன் மூலம் வேண்டுமென்றே சதி செய்யப்பட்டுள்ளது" என்று அகமது கூறினார்.

80க்கும் மேற்பட்டவர்கள் கைது

மேலும் இப்பகுதியில் அமைதியை உறுதிசெய்வதற்காக இரு தரப்பிலும் முக்கிய உறுப்பினர்களுடன் காவல்துறையும் நிர்வாகமும் ஆலோசனையில் ஈடுபட்டதாக போலீசார் இன்று தெரிவித்துள்ளனர். இந்த வன்முறை தொடர்பாக போலீசார் 40 வழக்குகளை பதிவு செய்து 80க்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்துள்ளனர்.

குறிப்பாக, "சம்பவத்தில் தொடர்புடைய 5 பேர் சுற்றி வளைக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்" என குருகிராம் துணை ஆணையர் நிஷாந்த் குமார் யாதவ் தெரிவித்துள்ளார்.

”நிலைமை கட்டுக்குள் உள்ளது!”

நூஹ் மாவட்ட தற்போதைய எஸ்பி நரேந்தர் பிஜர்னியா, ”இன்றைய சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. நூஹ்வில் நிலைமை கட்டுக்குள் உள்ளது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

பெட்ரோல், டீசல் விற்பனைக்குத் தடை

குருகிராம் மாவட்ட மாஜிஸ்திரேட் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”அசம்பாவித சம்பவங்களைத் தவிர்க்கவும், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவும், தற்போதுள்ள சூழ்நிலைகளைக் கருத்தில்கொண்டு, மாவட்ட குருகிராமில் உள்ள சோஹ்னா துணைப் பிரிவில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகஸ்ட் 2 வரை மூடப்பட்டிருக்கும்” என உத்தரவிடப்பட்டுள்ளது. அதுபோல், குருகிராமில் இயங்கும் அனைத்து எரிபொருள் நிலையங்களிலும் பெட்ரோல்/டீசல் விற்பனையும் தடை செய்யப்பட்டுள்ளது.

வன்முறை எங்கிருந்து தொடங்கியது? பின்னணியாக சொல்லப்படுவது என்ன?

ஹரியானாவில் மாடுகளைக் கொல்வோர் மீதும் மாட்டிறைச்சியைக் கொண்டு செல்வோர் மீதும் ‘பசு பாதுகாவலர்கள்’ என்பவர்கள், கடந்த காலங்களில் தாக்கப்பட்டு வருவதாக ஊடகங்களில் சொல்லப்படுகிறது. இதில், கடந்த ஜனவரி மாதம் மூன்று இஸ்லாம் இளைஞர்கள் பசு பாதுகாவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

இந்த வீடியோ அப்போது இணையதளங்களில் வைரலாகியது. மேலும், இதில் தாக்கப்பட்ட இளைஞர்கள் இருவர் உயிரிழந்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, உயிரிழந்த குடும்பத்தினர் பசு பாதுகாவலர்கள் மீது காவல் துறையில் புகார் அளித்தனர். இதில் முக்கிய நபராக பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்த மோனு மானேசர் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டிருந்தது. மனோசர் மற்றும் அவருடன் தொடர்புடைய 20 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்தான் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் பிரிஜ் மண்டல் ஜலாபிசேக ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலத்தில் மோனு மானேசர் கலந்துகொள்ள இருப்பதாக, விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்புகள் தங்களுடைய குழுக்களுக்கு செய்திகளை பரப்பியுள்ளன. இது நூஹ் மாவட்டம் தவிர, சுற்றியுள்ள குர்கான், ஃபரிதாபாத், பல்வால் ஆகிய பகுதிகளுக்கும் பரவியுள்ளது. இந்தச் சூழலில் இஸ்லாம் மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாக ஊர்வலம் சென்றபோது, கூட்டத்தில் இருந்தவர்கள் அம்மதத்திற்கு எதிராகக் கோஷங்களை எழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரப்பட்டு இஸ்லாம் இளைஞர்கள் கூட்டத்துக்குள் கற்களை எரிந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமுற்ற விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள அமைப்பினர், பிற இடங்களில் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும், காவல்துறை தரப்பில் வன்முறை எங்கிருந்து எப்படி தொடங்கியது என்பதற்கான முழு பின்னணியை தெரிவிக்கப்படவில்லை. வன்முறை பரவாமல் இருப்பதை உறுதி செய்யும் முனைப்பில் ஹரியானா காவல்துறை செயல்பட்டு வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட அரசியல் தலவர்கள் ஹரியானா வன்முறை குறித்து தங்களது வருத்தங்களையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இன்னும் மணிப்பூரே ஓயவில்லை.. அதற்குள் மற்றொரு வன்முறையா?

மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தின் சுவடுகளே இன்னும் மறையவில்லை. அதற்கு ஹரியானாவில் நடைபெற்று வரும் வன்முறை சம்பவங்கள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பெரிய அளவில் கார்கள் உள்ளிட்ட பொருட்கள் தீயிட்டு கொளுத்தப்பட்ட காட்சிகள் உண்மையில் வருத்தம் அளிப்பதாக உள்ளது. விரைவில் அமைதியை கொண்டு வர பல்வேறு தரப்பினரும் அங்கு முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவே தெரிகிறது. அதனால், விரைவில் அமைதி திரும்பு என நம்புவோம்.