இந்தியா

‘தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்’ - அமித்ஷா உறுதிமொழி 

‘தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்’ - அமித்ஷா உறுதிமொழி 

webteam

தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். 

தனியார் பத்திரிகை நிறுவனம் சார்பில் ‘பூர்வதயா இந்துஸ்தான்’ என்ற நிகழ்ச்சி ஒன்று ராஞ்சியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் ரவிசங்கர் பிரசாத், அமித் ஷா, நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய ரவி சங்கர் பிரசாத், “அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 370-னால் எவ்வித பயனும் இல்லை. இதனை ரத்து செய்ய இந்திய அரசிற்கு 70 ஆண்டுகாலம் ஆகியுள்ளது” எனத் தெரிவித்தார். 

இதன்பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றினார். அப்போது, “மக்களவைத் தேர்தலுக்கு பிறகு காங்கிரஸ் கலாச்சாரம் நாட்டிலிருந்து தூக்கி எறியப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் மக்கள் ஊழல் மற்றும் குடும்ப ஆட்சிக்கு எதிராக வாக்களித்துள்ளனர். 

விரைவில் நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேடு அமல்படுத்தப்படும். அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா ஆகிய நாடுகளில் இந்தியர்கள் சென்று சட்ட விரோதமாக வசிக்க முடியுமா? அப்படி இருக்கும் போது இந்தியாவில் மட்டும் வெளிநாடுகளின் மக்கள் எப்படி சட்ட விரோதமாக வசிக்க முடியும்? ஆகவே தான் தேசிய குடிமக்கள் பதிவேடு இந்தியா முழுவதும் அமல்படுத்தப்பட வேண்டும்” எனக் கூறினார்.