மொபைல் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தொலைத்தொடர்பு துறையில் போட்டியும் அதிகமாகியுள்ளது. ஏற்கனவே இந்த போட்டியை சமாளிக்க முடியாமல் ஏர்செல் திவாலானது. டோக்கோமோ இடமே தெரியவில்லை ; இந்நிலையில் மொபைல் சேவை வழங்குவதில் புதிய வரவு பதஞ்சலி.
சுவதேசி சம்ரிதி சிம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனம். கடந்த 27-ம் தேதி பாபா ராம் தேவ் இதனை அறிமுகப்படுத்தினார். பிஎஸ்என்எல் நிறுவனத்தோடு கை கோர்த்து சிம் கார்டுகளை விற்பனைசெய்து வரும் பதஞ்சலி இதனை நாடு முழுக்க தனித்தே செய்ய திட்டமிட்டிருக்கிறது.
சிம் கார்டுகளை அறிமுகப்படுத்தி அதிர்ச்சி கொடுத்த பாபா ராம் தேவின் அடுத்த அதிர்ச்சி ’கிம்போ’. என்னது கிம்போவா ? கூகுள் பிளே ஸ்டோர் சென்று தேடினால் அதற்கான விடை உங்களுக்கு கிடைக்கும். சமீப காலமாக மெசேஜ் அனுப்புவதை எளிதாக்கிய செயலிகளுள் ஒன்று வாட்ஸ் அப். அதிகமான பயனாளர்கள் பயன்படுத்தும் ஒன்றாக மாறிப் போனது வாட்ஸ் அப். இந்நிலையில் அதற்கு போட்டியாக இந்தியாவில் ’கிம்போ’ வை அறிமுகம் செய்திருக்கிறது பாபா ராம் தேவின் நிறுவனமான பதஞ்சலி.
கிம்போ என்பது ஒரு சமஸ்கிருத வார்த்தை. அந்த மொழியில் நலமாக இருக்கிறீர்களா என்பதே கிம்போ என்பதன் பொருள். அடுத்தவர்களிடம் நலம் விசாரிப்பதையே தனது ஐடியா ஆக்கி கிம்போவை களம் இறக்கி விட்டுள்ளார் ராம்தேவ். முன்னதாக பதஞ்சலி என்ற நிறுவனத்தை ஆரம்பித்த ராம் தேவ், உணவுப் பொருட்கள், தினசரி பயன்படுத்தும் பொருட்கள் என தனது தொழிலை செய்து வந்தது. ஆனால் தற்போது எந்த தொடர்பும் இல்லாத தொலைத்தொடர்பு துறையை கையில் எடுத்துள்ளதால், பதஞ்சலி ஸ்டோர்களை பயன்படுத்தி இதனை விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதிரடி ஆபர்ளும் வரவிருக்கிறது.