இந்தியா

‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்

‘மீடூ’வை போல ஆண்களுக்கு ஆதரவாக கிளம்பும் ‘மென்டூ’ இயக்கம்

webteam

தங்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்முறைகளை பெண்கள் தைரியமாக வெளி உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டது மீடூ. 2006ம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த தரானா புர்க் என்பவரால் தொடங்கப்பட்ட இந்த மீடூ, 2017ம் ஆண்டுக்குப் பிறகே பிரபலமடைந்தது. ஹாலிவுட்டில்கூட பலர் மீடூ புகார் அளிக்கத்தொடங்கினர். அதன் பின்பு மீடூ உலகமெல்லாம் பரவியது. 

இந்தியாவில் பாலிவுட் , கோலிவுட் என மீடூ புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்நிலையில் இப்போது மீடூ மாதிரி மென்டூ என்ற இயக்கத்தை புருஷ் அயோக் என்ற பெயரில் இந்தி நடிகர் கரண் ஓபராயின் நண்பர்கள் தொடங்கியுள்ளனர்.

ஆண்களைப் பழிவாங்குவதற்காக மீடூ மாதிரியான இயக்கத்தினை பல பெண்கள் பயன்படுத்திக்கொள்வதாகவும், பொய் புகார்கள் மூலம் ஆண்களை மன உளைச்சளுக்கு ஆளாக்குவதாகவும் இதனைத் தடுக்கவே மென்டூ இயக்கம் தொடங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்கொலை செய்துகொள்ளும் 51% ஆண்கள் பாலியல் பொய் புகாரால் மன உளைச்சலுக்கு ஆளானவர்கள் என புருஷ் ஆயோக் தெரிவிக்கிறது. சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிக்கு எதிராகக்கூட பாலியல் பொய் புகார் கொடுக்கப்பட்டதை அந்த அமைப்பு சுட்டிக்காட்டுகிறது. 

மென்டூ குறித்து தெரிவிக்கும் புருஷ் ஆயோக் அமைப்பு, சமீப காலமாக ஆண்களுக்கு எதிராக போலி பாலியல் குற்ற வழக்குகளை பெண்கள் பயன்படுத்துகின்றனர். அப்படி போலி புகார்கள் மூலம் சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதால் இந்த ‘மென் டூ’ இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர். ஆண்களுக்கு எதிரான புகார்களில் வழக்கின் இறுதி தீர்ப்பு வரும்வரை குற்றம் சாட்டப்படுபவர்களின் பெயரை வெளியிடக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மென் டூ இயக்கத்துக்குப் பிறகு பாலியல் வன்கொடுமை புகார் தொடர்பாகவும் பல கருத்துக்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. ஆண்கள் மீதான பாலியல் வன்கொடுமை புகாரை போலீசார் கவனமாக கையாள வேண்டுமென்று சட்ட நிபுணர்களும் கருத்து  தெரிவிக்கின்றனர். 

திருமண உறுதியின் அடிப்படையில் பரஸ்பர சம்மதத்துடன் உடலுறவு கொள்வதும், பின்னர் ஏற்படும் பிரச்னைகளால் பெண் புகார் கொடுத்தால் உடனடியாக அதனைப் பாலியல் வன்கொடுமையாக ஆணுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்றும் கருத்து தெரிவிக்கின்றனர். 

திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்தல் அடிப்படையில் அந்த உறவு வரும் என்றும் தீவிர விசாரணைக்கு பிறகே பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட வேண்டுமென்றும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தக் கருத்துக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தீவிர விசாரணையில்லாமல் குறிப்பிட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு என்பது நிச்சயம் சரியான அணுகுமுறை இல்லை என்றும் இது தொடர்பாக சட்டத்தில் கூட சில திருத்தங்களை கொண்டு வரலாம் என்றும் சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.