மேற்கு வங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டுமானால் அந்த இடத்திற்கு தகுதியான ஒரே ஒருவர் மம்தா பானர்ஜிதான் எனக்கூறிய மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் தற்போது அது நடக்க சாத்தியம் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை எதிர்த்து வெற்றி பெற காங்கிரஸ் கூட்டணி மிக மும்முரமாக வேலை பார்த்து வருகிறது. காங்கிரஸ் கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் எனக் குழப்பங்கள் நிலவி வரும் நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் ராகுல்காந்தியை முன் மொழிந்தார். ஆனால் அதற்கு கூட்டணி கட்சிகள் தேர்தலுக்குப் பிறகு பார்த்து கொள்ளலாம் எனத் தெரிவித்து வருகின்றன. அதில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியும் ஒருவர்.
இந்நிலையில் நேற்று மம்தா பானர்ஜியின் 64 வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த திலீப் கோஷ், மம்தா பேனர்ஜி நல்ல உடல்நலத்துடன் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.
மேலும் “மேற்கு வங்கத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வேண்டுமானால் அந்த இடத்திற்கு தகுதியான ஒரே ஒருவர் மம்தா பானர்ஜிதான். பிரதமர் வேட்பாளர் போட்டிக்கு பாஜகவில் தகுதி வாய்ந்தவர்கள் இருந்தாலும் மம்தா பானர்ஜிதான் முதலிடத்தில் உள்ளார். அவரது உடல்நிலை மற்றும் வாழ்வின் வெற்றிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். ஏனென்றால் மேற்கு வங்கத்தின் எதிர்காலம் அவரது வெற்றியை சார்ந்துள்ளது” எனத் தெரிவித்தார். இது பாஜகவினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், இதுகுறித்து இன்று ஏஎன்ஐக்கு பேட்டியளித்த மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், மம்தா பானர்ஜி பிரதமராவது சாத்தியம் இல்லை எனவும் இந்த விசயத்தை நல்ல நகைச்சுவையாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.