இந்தியா

“பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டியால் வளர்ச்சி பாதிப்பு”- ரகுராம் ராஜன்

Rasus

பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவற்றால் கடந்த ஆண்டில் பொருளாதார வளர்ச்சி தடைபட்டதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியா பல்கலைக்கழக கூட்டத்தில் பேசிய அவர், 2012 முதல் 2016-ஆம் ஆண்டு வரை இந்தியா வேகமான வளர்ச்சி கண்டதாகவும், அதன் பிறகு இரண்டு நடவடிக்கைகளால் வளர்ச்சி தடைபட்டதாகவும் கூறினார். 7 சதவிகித பொருளாதார வளர்ச்சி என்பது மக்களின் தேவைகளை பூர்த்திசெய்ய போதுமானதல்ல என ரகுராம் ராஜன் கூறியுள்ளார். அரசியல் கொள்கை முடிவெடுப்பதில் அதிகப்படியான அதிகாரக் குவிப்பு இந்தியாவின் முக்கிய பிரச்னைகளில் ஒன்று எனவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, குஜராத்தில் ஒற்றுமையின் சிலை வைக்கப்பட்டதில் பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதல் பெற வேண்டியிருந்ததாக சுட்டிக்காட்டினார். மையப் பகுதியில் இருந்து இந்தியர்கள் பணியாற்ற இயலாது, பலரும் சுமையை ஏற்கும் வகையில் இந்தியா பணியாற்ற வேண்டும் என்ற ரகுராம் ராஜன், ஆனால், இப்போது முடிவெடுக்கும் அதிகாரம் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். யாரும் முடிவெடுக்க விரும்பாமல், பிரதமர் அலுவலகத்தின் ஒப்புதலுக்காக காத்திருப்பதால், பிரதமர் 18 மணி நேரம் பணியாற்ற நேரிடுவதாகவும் ரகுராம் ராஜன் தெரிவித்தார்.