இந்தியா

“உடைந்து நொறுங்காமல் அப்படியே முழுமையாக உள்ளதா லேண்டர் விக்ரம்?” - இஸ்ரோ விளக்கம்

“உடைந்து நொறுங்காமல் அப்படியே முழுமையாக உள்ளதா லேண்டர் விக்ரம்?” - இஸ்ரோ விளக்கம்

rajakannan

லேண்டர் விக்ரமின் நிலை குறித்து தகவல்கள் இன்னும் உறுதிபடுத்தப்படவில்லை என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரயான்-2 திட்டத்தின் கடைசி நேரத்தில் லேண்டர் விக்ரமின் தொடர்பு கடந்த சனிக்கிழமை துண்டிக்கப்பட்டது. லேண்டர் நிலவில் தரையிறங்குவதை காண இந்தியாவே காத்திருந்த நிலையில் அது நடக்காமல் போனது. இதனிடையே  தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்ட விக்ரம் லேண்டர், இருக்கும் இடம் தெரிய வந்திருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் புதிய தலைமுறைக்கு நேற்று தெரிவித்தார்.

நிலவின் மேற்பரப்பில் லேண்டர் இருப்பதை ஆர்பிட்டர் படம் எடுத்து அனுப்பியுள்ளதாகக் கூறிய அவர் லேண்டர் கண்டுபிடிக்கப்பட்ட போதிலும் தகவல் தொடர்பு இன்னும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார். லேண்டர் தொடர்பை பெற தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் கூறினார்.

இதனிடையே, லேண்டர் விக்ரம் உடையாமல் முழுமையாக அதே நிலையில், சந்திரனின் மேற்பரப்பில் சாய்ந்தபடி இருப்பதாக பிடிஐ இன்று காலை செய்தி வெளியிட்டது. பெயர் குறிப்பிடாத இஸ்ரோ அதிகாரி ஒருவர் இந்த தகவலை கூறியதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், லேண்டர் விக்ரம் உடையாமல் முழுமையாக உள்ளதாக பிடிஐ வெளியிட்ட செய்தி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இஸ்ரோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. இஸ்ரோ தலைமையகம் சார்பில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.