வடக்கு, தெற்கு என்ற கருத்தாக்கம் தவறு என, பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கூறியிருப்பது கவனம் பெற்றுள்ளது.
அடுத்தாண்டு தொடங்கும் மக்கள்தொகை கணக்கெடுப்பிற்கு, தொகுதி மறுவரையறை பணிகள் விரைவில் நடைபெறவுள்ளது. இச்சூழலில், மக்கள்தொகை, பிரதிநிதித்துவம், தொகுதி மறுவரையறை: வடக்கு-தெற்கு பிளவு என்ற நூல் வெளியிடப்பட்டது.
நூல் வெளியீட்டு விழாவில் பேசிய பிஹார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான், மக்களவை தொகுதி மறுவரையறை, தரவுகள் மற்றும் உண்மைகளின் அடிப்படையில் இருக்க வேண்டுமெனவும், மக்களின் உணர்ச்சிகளின் அடிப்படையில் இருக்கக்கூடாது என்றும் தெரிவித்தார்.
1951ஆம் ஆண்டு தரவுகளின்படி, பிகாரின் மக்கள் தொகையைவிட தமிழ்நாட்டின் மக்கள் தொகை சற்று அதிகமிருந்தது. ஆனால் 20 வருடங்களில் பிகாரின் மக்கள் தொகை தமிழ்நாட்டினை விட அதிகரித்தது. இதன்காரணமாக, 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தமிழ்நாட்டை விட அதிக மக்களவை தொகுதிகளை பிகார் பெற்றது.
தற்போதைய சூழலில், பிகாரின் மக்கள் தொகை 13.40 கோடியாக இருக்குமென மதிப்படப்படுகிறது. அண்மையில், பிகாரின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சாவின் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை, பிகார் மற்றும் வட இந்திய மாநிலங்களுக்கான அரசமைப்பு உரிமை என கூறியிருந்தார்.
இச்சூழலில், பிகார் ஆளுநரின் பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.அதேபோல் நிகழ்ச்சியில் பேசிய நூலின் ஆசிரியர் ரவி மிஸ்ரா, வடஇந்தியாவிற்கு நாடாளுமன்றத்தில் குறைவான பிரதிநிதித்துவமே இருப்பதாகவும், மக்களவை மற்றும் மாநிலங்களவை தொகுதிகள் அதிகரிக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்கு தென்மாநிலங்கள் எதிர்க்கும் சூழலில், அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் வடமாநிலங்கள் வரிந்துகட்டுவதையே இந்த நிகழ்வுகள் உணர்த்துவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.