5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய நிலையில் ம.பி.யில் இன்று காலை வரை வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது. சத்தீஸ்கர், ம.பி தவிர மற்ற மாநிலங்களில் நேற்றே வாக்கு எண்ணிக்கை முடிந்த நிலையில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு தொகுதியில் இன்று காலை வரை வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது.
மொத்தம் 230 தொகுதிகள் கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 229 தொகுதிகளின் வெற்றி நிலவரம் நேற்றிரவு தெரியவந்தது. அதன்படி 113 இடங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி கண்டது. பாஜக 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும், சமாஜ் வாதி கட்சி 1 இடங்களிலும் வெற்றி பெற்றன. சுயேட்சைகள் 4 இடங்களில் வெற்றி கண்டனர். 1 தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து வந்தது. அந்த தொகுதியில் காங்கிரஸ் முன்னணி வகித்து வந்த நிலையில் இன்று காலை 8.15 மணியளவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. கிட்டத்தட்ட 24 மணி நேரம் இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என்பதால் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் அதிகப்பட்சமாக காங்கிரஸ் கட்சி 114 இடங்களை கைப்பற்றியுள்ளது. 1 தொகுதியில் வெற்றி கண்டுள்ள சமாஜ் வாதி, காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே ஆதரவு தெரிவித்துள்ளதால் காங்கிரஸ் பலம் 115 ஆக உள்ளது. இருப்பினும் ஆட்சியமைக்க இன்னும் 1 இடம் காங்கிரஸ் கட்சிக்கு தேவை. 2 இடங்களை கைபற்றியுள்ள பகுஜன் சமாஜ், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தெரிவிக்க பெரும்பான்மையான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் காங்கிரஸ் கட்சி ஆட்சியமைக்கும் எனத் தெரிகிறது. அதேசமயம் 109 இடங்களில் வெற்றி கண்டுள்ள பாஜகவும் ஆட்சியமைக்க தீவிரம் காட்டி வருகிறது.