இந்தியா

கிரிக்கெட் மட்டையால் அடித்து தாய், மகள் கொலை: மகனை சந்தேகிக்கும் காவல்துறை

கிரிக்கெட் மட்டையால் அடித்து தாய், மகள் கொலை: மகனை சந்தேகிக்கும் காவல்துறை

webteam

நொய்டாவில் உள்ள குடியிருப்பில் தாய், மகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவை சேர்ந்த தொழிலதிபர் சவுமியா அகர்வால். இவர் தனது மனைவி, மகன், மகள் மற்றும் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் கடந்த 3ஆம் தேதி தொழில் நிமத்தமாக குஜராத்திற்கு சென்றுள்ளார். இவரது பெற்றோர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளியூர் சென்றுள்ளனர். அவரது இல்லத்தில் மனைவி அஞ்சலி அகர்வால், மகள் மணிகர்னிகா, மகன் பிராகர் ஆகியோர் மட்டுமே இருந்துள்ளனர்.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் இவரது இல்லத்தை தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். ஆனால் செல்போன் ரிங் ஆகிக்கொண்டே இருந்துள்ளது. பிறகு செவ்வாய்கிழமை முதல் ஃபோன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. இதனையடுத்து சவுமியா அகர்வால் தனது உறவினரான விராத்தை தொடர்பு கொண்டு ஃபோன் சுவிட்ச் ஆப் ஆகியுள்ள தகவலை தெரிவித்துள்ளார். மேலும் தனது இல்லத்தில் சென்று பார்வையிடுமாறு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து விராத் அங்குள்ள காவல் நிலையத்தில் இதுதொடர்பாக தெரிவித்து காவலர்களுடன் சவுமியா இல்லத்திற்கு சென்றுள்ளார். வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது சவுமியா அகர்வாலின் மனைவி அஞ்சலி அகர்வால் (43), மகள் மணிகர்னிகா (11) ஆகியோர் கொலை செய்யப்பட்டு இருந்தனர். இதனையடுத்து சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் இருந்த 
கத்தரிக்கோல் மற்றும் கிரிக்கெட் மட்டையில் ரத்த கறை படித்துள்ளது. இதனை போலீஸார் கைப்பற்றினர்.

இந்த சம்பவத்தின் போது வீட்டில் இருந்த சவுமியா அகர்வாலின் மகன் பிராகரை காணவில்லை. காவல்துறையினர் இந்த இரட்டை கொலையை பிராகர் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர். வீட்டிற்கு வெளியே இருந்த சிசிடிவி கேமராவில் பிராகர் ஒரு பையை எடுத்து செல்வது பதிவாகியுள்ளது. மேலும் வீட்டு லாக்கரில் இருந்த 2 லட்சம் ரூபாயை காணவில்லை என சவுமியா அகர்வால் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.