இந்தியா

காஷ்மீரில் என்ன நடக்கிறதென்று தெரியவில்லை: ஒமர் அப்துல்லா

webteam

காஷ்மீரில் உண்மையில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியவில்லை என்று தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஒமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

அமர்நாத் யாத்திரையை சீர்குலைக்க பாகிஸ்தா‌ன் பயங்கரவாதிகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து‌ ஜம்மு காஷ்‌மீர் முழுவதும் ராணுவம் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. யாத்திரை முடித்தவர்கள் உடனடியாக சொந்த ஊர்களுக்கு திரும்பும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கூடுதல் விமானங்களை இயக்க தயாராக இருக்கும்படி விமான நிறுவங்களை மத்திய சிவில் போக்குவரத்து கழகம் அறிவுறுத்தியுள்ளது.

மாநிலம் முழுவதும் பதற்றம் நிலவும் சூழலில், மக்கள் தங்கள் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்ப பெட்ரோல் பங்க்குகளிலும், உணவுப் பொருள்களை வாங்க கடைவீதிகளிலும் பெரும் தவிப்புடன் திரண்டுள்ளனர். விமான நிலையத்திலும் கூட்டம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி, அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்துப் பேசினார். மேலும், இந்த விவகாரத்தில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிட வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்,‌ மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஒமர் அப்துல்லா, ஆளுநர் சத்யபால் மாலிக்கை சந்தித்து மாநிலத்தில் தற்போதைய நிலை குறித்து விவாதித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜம்மு காஷ்மீரில் தற்போது நடக்கும் நிலை பற்றி தெரியபடுத்த வேண்டும். இதுபற்றி அதிகாரிகளிடம் கேட்டால், ஏதோ நடந்து கொண்டிருக் கிறது என்று கூறுகிறார்கள். ஆனால், உண்மையில் என்ன நடக்கிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டது ஏன்? படைகள் குவிக்கப்பட்டது ஏன்? ஜம்மு காஷ்மீர் மக்களின் பதற்றத்தைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசு விளக்கம் தரவேண்டும்’’ என்றார்.