இந்தியா

இந்தியாவின் வளர்ச்சி கதை முடிவுக்கு வரும்: நோபல் பரிசு வென்ற ஆய்வாளர் எச்சரிக்கை

rajakannan

வேலைவாய்ப்பின்மை பிரச்னையால் இந்தியாவின் வளர்ச்சி கதைகள் முடிவுக்கு வரும் என்று நோபல் பரிசு வென்றவரும், பொருளாதார ஆய்வாளருமான பவுல் க்ருக்மன்  எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வளர்ச்சி, முன்னேற்றம் என்ற முழக்கத்தை முன் வைத்துதான் பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்தது. முதல் மூன்று வருடங்களில் பாஜக ஆட்சி மீது வளர்ச்சி குறித்து பெரிய அளவில் விமர்சனங்கள் எழவில்லை. ஆனால், கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விமர்சனங்கள் அதிக அளவில் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக வேலைவாய்ப்பின்மை விவகாரம் பெரிய அளவில் பூதாகரமாக வெடித்து வருகிறது. அதனால், பிரதமரின் பக்கோடா குறித்த பேச்சுக்கு அதிக எதிர்வினைகள் இருந்தது. ஆனால், தாங்கள் எடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு இனிதான் பலன்கள் கிட்ட உள்ளதாக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்தான், மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பவுல், இந்தியாவின் வளர்ச்சி குறித்து பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளார். குறிப்பாக, பிரிட்டன் 150 ஆண்டுகளில் சாதித்ததை இந்தியா 30 ஆண்டுகளிலேயே சாதித்தது என புகழ்ந்தார். இந்தியா அடுத்து வரும் ஆண்டுகளில் அதிக வளர்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக நம்பிக்கை தெரிவித்தார். அதற்கு, நாட்டில் பெருவாரியான மக்களுக்கு மின் வசதியை கொண்டு செல்லும் பிரதமர் மோடியின் திட்டம் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு சொன்னார் பவுல்.

இருப்பினும், பெரிய அளவிலான வேலைவாய்ப்பின்மை பிரச்னையால் இந்தியாவில் வளர்ச்சி கதை முடிவுக்கு வரும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, தொழில் துறையில் அதிக அளவிலான வேலைவாய்ப்புகளை உருவாக்குவதுதான் அதற்கு தீர்வாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.