இந்தியா

விகாஸ் துபே என்கவுண்டர் வழக்கு:.. ஒரு சாட்சி கூட இல்லை?

JustinDurai
உ.பி. ரவுடி விகாஸ் துபே என்கவுண்டர் செய்யப்பட்ட சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லையா? விசாரணை ஆணையத்தின் நிலை என்ன?
 
உத்தரபிரதேசத்தின் கான்பூரில் பிரபல ரவுடியாக விளங்கி வந்த விகாஸ் துபே என்பவரை கொலை முயற்சி வழக்கு ஒன்றில் கைது செய்வதற்காக கடந்த ஜூலை 2-ம் தேதி இரவில் போலீசார் சென்றனர். அப்போது தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசார் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுவிட்டு விகாஸ் துபே தப்பினார்.
 
இந்த பரபரப்பு சம்பவத்தில் துணை சூப்பிரண்டு உள்பட 8 போலீஸ்காரர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்படுத்திய இந்த சம்பவத்தில் தொடர்புடைய விகாஸ் துபே மற்றும் அவரது கூட்டாளிகளை பிடிக்க 25-க்கும் மேற்பட்ட தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டனர்.
 
கடந்த ஜூலை 9 ஆம் தேதி மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனில் போலீசாரிடம் விகாஸ் துபே சிக்கினார். இதையடுத்து, உத்தரபிரதேச போலீசார், விகாஸ் துபேவை கான்பூருக்கு காரில் அழைத்து வந்தனர்.
 
ஜூலை 10 ஆம் தேதி அதிகாலை கான்பூர் அருகே வந்த போது விகாஸ் துபே உள்பட போலீஸார் வந்த வாகனம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தை பயன்படுத்தி விகாஸ் துபே தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. அப்போது, ஏற்பட்ட மோதலில், விகாஸ் துபே என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த என்கவுண்டர் சம்பவம் போலியானது என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்தன.
 
இதையடுத்து விகாஸ் துபே என்கவுண்டர் தொடர்பாக விசாரிப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி பி.எஸ். சவுகான் தலைமையில், ஓய்வு பெற்ற நீதிபதி் அகர்வால், ஓய்வு பெற்ற போலீஸ் டிஜிபி குப்தா ஆகியோர் கொண்ட விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. மேலும் விகாஸ் துபேவுக்கும் போலீஸாருக்கும், மாநில அரசு அதிகாரிகளுக்கும் ஏதாவது தொடர்பு இருந்ததா என்பதையும் விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே விசாரணை ஆணையத்திற்கு உத்தரவு பிறப்பித்தார்.
 
இதையடுத்து சவுகான் தலைமையிலான விசாரணை ஆணையம் என்கவுண்டர் நடந்த இடம், விகாஸ் துபேவின் சொந்த கிராமம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேரடி விசாரணை மேற்கொண்டு வந்தது. ஆனால் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு நான்கு மாதங்களாகியும் இதுவரை போலீசாருக்கு எதிராக ஒரு சாட்சியமும் பதிவாகவில்லை. தாமாக முன்வந்து தகவலோ, ஆதாரமோ தெரிவிக்கலாம் என விளம்பரம் செய்து வந்த நிலையிலும் அதற்கான பலனில்லை என்பது தெரியவந்துள்ளது.
 
"துபேயின் உறவினர்கள் கூட தங்கள் அறிக்கைகளை ஆணையம் முன் கொடுக்க முன்வரவில்லை. இதுவரை, பெரும்பாலும் போலீஸ் சாட்சிகள்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று விசாரணை ஆணையம் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.