phone call reuters
இந்தியா

இனி Truecaller தேவையில்லை? போனில் வரப்போகும் புதிய வசதி! நவம்பர் 1 முதல் அமல்?

போன் அழைப்பை ஏற்கும் முன்பே யார் அழைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி என்ன திட்டம் கொண்டுவரப்படவுள்ளது, எப்போதிலிருந்து திட்டம் செயல்பாட்டுக்கு வரவுள்ளது என்பதைப் பார்க்கலாம்.

PT WEB

செய்தியாளர் - ராஜ்குமார்.ர

ஒரு தொலைபேசி எண்ணிலிருந்து மற்றொரு எண்ணுக்கு எப்போது வேண்டுமானாலும் அழைப்புகளை மேற்கொள்ள முடியும். ஆனால், தெரியாத எண்களிலிருந்து அழைப்புகள் வரும்போது, அவற்றை ஏற்பதா, வேண்டாமா என்ற தயக்கம் பலருக்கும் ஏற்படுகிறது. சில நேரங்களில், முக்கியமான அழைப்புகளைக்கூட பலர் தவிர்த்துவிடுகின்றனர். இதற்கு, தற்போது அதிகரித்து வரும் இணையவழி மோசடிகளும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இந்நிலையில், அழைப்பை ஏற்கும் முன்பே யார் அழைக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளும் வகையில் புதிய வசதியை அறிமுகப்படுத்தத் தொலைத்தொடர்புத் துறையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

phone call

இந்தப் புதிய வசதிக்கு Calling Name Presentation (CNAP) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் மூலம், உங்களது மொபைல் போனில் சேமிக்கப்படாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தாலும், அந்த எண்ணுடன் தொடர்புடைய அழைப்பவரின் பெயரையும் திரையில் பார்க்க முடியும். இதற்காகத் தனியாக எந்தச் செயலியையும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

தற்போது, மொபைல் போனில் சேமிக்கப்படாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தால், அந்த எண் மட்டுமே திரையில் தோன்றும். இதனால், அழைப்பவர் யார் என்பதைத் தெரிந்துகொள்ளப் பலரும் Truecaller போன்ற செயலிகளைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இந்தப் புதிய வசதியில் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் சந்தாதாரர் பதிவுகளில் உள்ள பெயர் விவரங்களின் அடிப்படையில் அழைப்பவரின் பெயர் காட்டப்படும்.

அதேசமயம், அந்த எண்ணை ஏற்கெனவே உங்கள் தொடர்புப் பட்டியலில் சேமித்திருந்தால், நீங்கள் சேமித்துள்ள பெயரே முன்னுரிமை பெற்று திரையில் காட்டப்படும். மேலும், வெளிநாடுகளிலிருந்து வரும் அழைப்புகளுக்கு, சேமிக்கப்படாத எண்ணுடன் தொடர்புடைய பெயருக்குப் பதிலாக 'International Call' என்ற தகவல் காட்டப்படும் எனக் கூறப்படுகிறது.

மத்திய தொலைத்தொடர்புத் துறையின் உத்தரவின்படி, 2026 நவம்பர் 1 முதல் 4G, 5G உள்ளிட்ட நெட்வொர்க்குகளில் இந்த வசதியை அறிமுகப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காகப் பயனர்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்த வசதியைச் செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

phone call

இருப்பினும், தற்போது வெளியாகியுள்ள உத்தரவு 2G, 3G நெட்வொர்க்குகள் மற்றும் லேண்ட்லைன் தொலைபேசிகளுக்குப் பொருந்தாது. இவற்றிலும் இந்த வசதியை அறிமுகப்படுத்துவது குறித்து பின்னர் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, தெரியாத எண்களிலிருந்து வரும் அழைப்புகளை அடையாளம் காண்பதை எளிதாக்குவதாகும். குறிப்பாக, இணையவழி மோசடிகளும் போலி அழைப்புகளும் அதிகரித்து வரும் சூழலில், அழைப்பவரின் பெயரை முன்கூட்டியே தெரிந்துகொள்வது பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.