பன்றிக் காய்ச்சல் தொடர்பான வதந்தியால் ஆந்திராவில் கிராம மக்கள், பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காமல் தவிக்கின்றனர்.
ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் கடந்த அக்டோபர் மாதம் பன்றிக் காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பன்றிக் காய்ச்சலுக்கு பலரும் உயிரிழந்ததால், லேசான காய்ச்சல் வந்தால் கூட பொதுமக்கள் அச்சப்படத் துவங்கினர். இருப்பினும் மக்களிடம் அச்சத்தை தவிர்க்கவும், பன்றிக் காய்ச்சல் பரவுவதை தடுக்கவும் அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனிடையே ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள சிண்டகொல்லு கிராமத்தில் நமச்சார்யா (45) மற்றும் மாரியம்மா (32) ஆகிய இருவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அடுத்தடுத்து உயிரிழந்தனர். இவர்கள் இருவரும் மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால் இருவரின் உயிரிழப்பிற்கும் பன்றிக் காய்ச்சல்தான் காரணம் என்கிற வதந்தி வேகமாக பரவுகிறது.
நமச்சார்யா மற்றும் மாரியம்மா ஆகிய இருவரும் பன்றிக் காய்ச்சலால் தான் உயிரிழந்துள்ளார்கள் என்கிற வதந்தி பக்கத்து கிராமத்திற்கும் பரவியது. இதனால் மற்ற கிராம மக்கள் சிண்டகொல்லு கிராமத்திற்கு வருவதில்லை. ஒருவேளை நமக்கும் பன்றிக் காய்ச்சல் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர்கள் கிராமத்திற்குள் வருவதை தவிர்க்கின்றனர். அதேபோல மற்ற கிராமத்திற்குள்ளும் இக்கிராம மக்களை நுழையவிடுவதில்லை. இதனால் சிண்டகொல்லு கிராம மக்கள் பால் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் திண்டாடி வருகின்றனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லும் வேன்களும் இக்கிராமத்திற்குள் நுழைய மறுக்கின்றன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட கிராமத்தை ஆட்சியர் ஆய்வு செய்துள்ளார். அத்துடன் கிராமத்திற்கு மருத்துவக் குழுக்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் சந்தேகத்தை தீர்க்கவும் மருத்துவர்கள் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. மீறி கிராம மக்களை ஒதுக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்ளது.