பெற்றோர் விருப்பத்தை மீறி திருமணம் செய்வோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்று அலகாபாத் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சர்ச்சை தீர்ப்புகளுக்கு பெயர் போன, அலகாபாத் நீதிமன்றத்தில்தான் இந்த வழக்கு வந்துள்ளது. காதல் திருமணத்தை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இன்றும் பலரிடையே ஏற்படவில்லை என்றுதான் இன்றைய செய்திகள் பல உறுதிப்படுத்துகிறது . பெற்றோர்களின் அணுமதியும், விருப்பமும் இல்லாமல் செய்யப்படும் திருமணங்கள் ஆணவக்கொலை வரை செல்லும் அதிர்ச்சிகர சம்பவங்களையும் காண முடிகிறது.
இந்தவகையில், உத்தரப்பிரதேச மாநிலம், சித்திரகூட் மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரேயா கேசர்வாணி மற்றும் அவரது கணவர் ஆகிய இருவரும் பெற்றோரின் எதிர்ப்பை மீறி, அவர்களின் விருப்பம் இல்லாமல் திருமணம் செய்துள்ளனர்.
இந்நிலையில், தங்களின் உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சிய அவர்கள், இருவருக்கும் போலீஸ் பாதுகாப்பு வேண்டியும், தங்கள் அமைதியான திருமண வாழ்க்கையில் யாரும் தலையிட வேண்டாம் என்றும் மாவட்ட எஸ்.பியிடம் மனு அளித்துள்ளனர்.
இந்த மனுவை படித்த காவல் அதிகாரி, எந்த அச்சுறுத்தலும் இவர்களுக்கு இருப்பதாக ஆதாரம் இல்லை . எனவே, பாதுகாப்பு கோர முடியாது என்று தெரிவித்துள்ளார்.
இதனால், ஸ்ரேயா அலகாபாத் உயர்நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார். அதில், தனக்கும் தனது கணவரும் போலீஸ் பாதுகாப்பு கோரியும், தங்கள் அமைதியான திருமண வாழ்க்கையில் யாரும் தலையிட வேண்டாம் என்று உத்தரவிடக்கோரியும் வழக்கு தொடர்ந்தார் .
இந்த வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி சௌரப் ஸ்ரீவாஸ்தவா, மனுதாரரின் உயிருக்கு ஆபத்து விளைவிப்பதாக எந்த ஆதாரமும் இல்லை என்றும், பெற்றோர் விருப்பத்தை மீறி திருமணம் செய்வோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க முடியாது என்றும் உத்தரவிட்டு, ரிட் மனுவை தள்ளுபடி செய்தார்.
மேலும் நீதிபதி கூறுகையில், "லதா சிங் vs உத்தரப் பிரதேச அரசு வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் இந்த தம்பதிக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. தங்கள் சொந்த விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளும் இளைஞர்களுக்குப் பாதுகாப்பு வழங்குவது நீதிமன்றங்களின் நோக்கமல்ல. ஆதாரம் இல்லை இந்த வழக்கில் மனுதாரர்களின் உயிருக்கும் சுதந்திரத்திற்கும் ஆபத்து உள்ளது என்பதற்கு எந்தவொரு ஆதாரமோ அல்லது காரணமோ இல்லை. மனுதாரர்களில் உறவினர்கள் இவர்களை உடல் ரீதியாகவோ அல்லது மன ரீதியாகவே தாக்கக்கூடும் என்பதற்கு ஒரு சிறிய ஆதாரம் கூட இல்லை. மேலும், உறவினர்கள் தங்களை மிரட்டினர் என்பது குறித்து அவர்கள் போலீஸ் நிலையத்தை அணுகி புகார் அளித்தனரா என்பது குறித்த விவரங்களும் இல்லை" என்றார்.