இந்தியா

வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் காலக்கெடுவை நீட்டிக்க வாய்ப்பே இல்லை - மத்திய அரசு

ச. முத்துகிருஷ்ணன்

வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஜூலை 31ஆம் தேதிக்கு பின்னர் நீட்டிக்கும் திட்டம் இல்லை என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

சம்பளம் பெறும் ஊழியர்கள் மற்றும் கணக்கு தணிக்கை செய்யப்படாத தனிநபர்கள் தங்கள் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூலை மாதம் 31 ஆகும். காலக்கெடு ஜூலை 31 என்றாலும், ஒருவர் டிசம்பர் 31 வரை வருமான வரி கணக்கு தாக்கல் செய்யலாம். இது தாமதமான வருமான வரி கணக்கு (Belated ITR) என்று அழைக்கப்படுகிறது. இதற்கு நீங்கள் அபராதத் தொகையை செலுத்த வேண்டியது இருக்கும். நிலுவைத் தேதிக்குள், அதாவது ஜூலை 31க்குள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம். மேலும் வருமான வரித்துறையிடமிருந்து உங்களுக்கு நோட்டீஸ் ஒன்றும் அனுப்பப்படலாம்.

கணக்கு தணிக்கை செய்யப்பட வேண்டிய வரி செலுத்துபவர்களுக்கு அக்டோபர் 31 கடைசி தேதியாகும். கடந்த இரண்டு நிதியாண்டுகளில் கொரோனா தொற்றுநோய் பரவல் மக்களை கடுமையாக பாதித்ததால், வருமான வரிக் கணக்குளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை அரசாங்கம் நீட்டித்தது. அதே போல இந்தாண்டும் காலக்கெடு நீட்டிக்கப்படும் என்று தகவல் பரவி வந்த நிலையில், அதற்கு வாய்ப்பில்லை என்று வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் திட்டவட்டமாக தெரிவித்தார்.

“வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியான ஜூலை 31-ம் தேதியை நீட்டிப்பது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை. ஜூலை 31 ஆம் தேதிக்குள் பெரும்பாலான ரிட்டர்ன்கள் வந்துசேரும் என எதிர்பார்க்கிறோம். எனவே ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கடைசி தேதியை அரசாங்கம் நீட்டிக்க அவசியமில்லை. இந்த நிதியாண்டு 2021-22 இல், ஜூலை 20 ஆம் தேதிக்குள் 2.3 கோடிக்கும் அதிகமான வருமான அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தேதிகள் நீட்டிக்கப்படும் என்பதுதான் இப்போது வாடிக்கை என்று மக்கள் நினைக்கிறார்கள். அதனால், ஆரம்பத்தில் ரிட்டர்ன்களை நிரப்புவதில் கொஞ்சம் தாமதம் செய்தார்கள். முன்பு தினமும் 50,000 பேர் ரிட்டன் தாக்கல் செய்து வந்தனர், தற்போது அந்த எண்ணிக்கை 20 லட்சமாக உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களில் ரிட்டர்ன்கள் அதிகரிக்கும். காலக்கெடுவுக்குள் மக்கள் தங்கள் ரிட்டர்ன்களை தாக்கல் செய்வார்கள் என்றும் நான் நம்புகிறேன். இப்போது தினசரி அடிப்படையில் 15 லட்சம் முதல் 18 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது. இது படிப்படியாக 25 லட்சமாக உயரும். விரைவில் 30 லட்சம் வருமானம் கிடைக்கும்” என்று வருவாய்த்துறை செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்தார்.