இந்தியா

"இந்தியர்களின் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது" பிரதமர் மோடி

jagadeesh

இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேல் விட்டுச் சென்ற இந்தியர்களின் ஒற்றுமையை யாராலும் குலைக்க முடியாது என பிரதமர் மோடி தெரிவித்தார்.

சர்தார் வல்லபாய் பட்டேலின் 144ஆவது பிறந்த நாளையொட்டி குஜராத்தில் உள்ள அவரது பிரமாண்ட சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். இதையடுத்து ஒற்றுமைக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதையடுத்து பல்வேறு பாதுகாப்புப் படையினரின் அணிவகுப்பை மோடி பார்வையிட்டார். குஜராத் பெண் காவலர்களின் இருசக்கர‌ வாகன சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. இதையடுத்துப் பேசிய மோடி, நாட்டு மக்களின் ஒற்றுமை விசித்திரமானது என்று உலக நாடுகள் உணர்வதாகவும் ஆனால் இந்தியர்களான நமக்கு இது உயிர்நாடி என உணர்ச்சிப்பூர்வமாக மோடி பேசினார். 

இதுவரை முறியடிக்க விரும்பியவர்களின் முயற்சி பலனளிக்காமல் போனதாக மோடி தனது உரையில் குறிப்பிட்டார். இந்தியாவுடன் போரிட்டு வெல்ல முடியாதவர்கள் அதன் ஒற்றுமைக்கு சவால் விடுக்கிறார்கள் என்றும் அவர்களின் பல முயற்சிகளுக்குப் பிறகும் இந்தியாவின் ஒற்றுமையை குலைக்க முடியாமல் போயுள்ளது என்றும் மோடி பேசினார். படேலின் சிலையை கடந்த 11 மாதங்களில் 26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர். சிலையை பார்வையிட டிக்கெட் விற்பனை செய்ததில் 71 கோடியே 66 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக சர்தார் படேல் அறக்கட்டளை தெரிவித்துள்ளது.