ஜம்மு-காஷ்மீரில் இயல்பான சூழல் இல்லை என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு பின் காஷ்மீரில் பல கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. காஷ்மீர் நிலவரம் குறித்து ஆய்வு செய்ய அங்கு சென்ற ராகுல்காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ராகுல் காந்தி தலைமையில் 12 தலைவர்கள் டெல்லியிருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட நிலையில் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ராகுல் காந்தியுடன் குலாம் நபி ஆசாத், திமுகவின் திருச்சி சிவா உள்ளிட்டோரும் சென்றனர்.
இந்நிலையில் இதுதொடர்பாக ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். அதில், “சில நாட்களுக்கு முன்பு ஜம்மு-காஷ்மீருக்கு வந்து நிலைமை பார்வையிடுங்கள் என்று எனக்கு அம்மாநில ஆளுநர் அழைப்புவிடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்டுதான் நானும் எதிர்க்கட்சியின் தலைவர்களும் இன்று ஜம்மு-காஷ்மீர் சென்றோம். ஆனால் நாங்கள் யாரும் விமான நிலையத்தை தாண்டி எங்கும் செல்ல அனுமதி அளிக்கப்படவில்லை. அங்குள்ள பத்திரிகையாளர்களும் ஒழுங்காக நடத்தப்படவில்லை. ஆகவே ஜம்மு-காஷ்மீரில் இயல்பு நிலை இல்லை என்பது தெளிவாக தெரிகிறது” எனத் தெரிவித்துள்ளார்.