இந்தியா

“மாநிலங்கள் விரும்பும் மொழிகளை வைத்துக் கொள்ளலாம்” - மனிதவள அமைச்சகம்

webteam

மும்மொழி கொள்கையில் எந்த மொழியை வேண்டுமானாலும் மாநிலங்கள் தேர்வு செய்துகொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின் (Central Advisory Board of Education (CABE)) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் மற்றும் 26 மாநில கல்வி அமைச்சர்கள் கலந்துகொண்டனர். 

இந்தக் கூட்டத்தில் மும்மொழி கொள்கையில் மாநிலங்கள் விரும்பும் மொழிகளை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மனிவள அமைச்சக அதிகாரி ஒருவர்  ‘தி பிரிண்ட்’ தளத்திற்கு தகவல் அளித்துள்ளார். அதில், “இந்த ஆலோசனை கூட்டத்தில் மாநிலங்கள் தங்களின் தாய்மொழியில் கல்வி இருக்கவேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தனர். அதற்கு மத்திய அரசும் அனுமதி அளித்துள்ளது. அத்துடன் மும்மொழி கொள்கையில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்க ஆவசியமில்லை என்றும் மாநிலங்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மும்மொழி கொள்கையில் மாநிலங்கள் தங்களது விருப்பமான மூன்று மொழிகளை தேர்வு செய்து பயிற்றுவிக்கலாம் என்று தெளிவு படுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக கடந்த மே மாதம் 31ஆம் தேதி வெளியான புதிய கல்விக் கொள்கை வரைவில் இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கண்டிப்பாக பயிற்றுவிக்க வேண்டும் என்று வார்த்தை இருந்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனைத் தொடர்ந்து மத்திய அரசு புதியக் கல்வி கொள்கை வரைவில் திருத்தம் மேற்கொண்டது. அதில் இந்தச் சர்ச்சைக்குரிய வார்த்தையை திருத்தியது குறிப்பிடத்தக்கது.