no helmet no petrol pt web
இந்தியா

ஹெல்மெட் இல்லையென்றால் பெட்ரோல் இல்லை! எங்கே தெரியுமா?

ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்க தடை

PT digital Desk

ஹெல்மெட் அணியாமல் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் விற்பனை செய்ய தடை விதிக்கும் புதிய உத்தரவை மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மற்றும் போபால் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்தியிருக்கிறது. விதியை மீறும் பெட்ரோல் பம்பிற்கு சீல் வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த செவ்வாயன்று நடைபெற்ற கூட்டத்தில் சாலைப் பாதுகாப்புக் குழுவின் தலைவரும் முன்னாள் நீதிபதியுமான நீதிபதி அபய் மனோகர் சப்ரே பிறப்பித்த உத்தரவுகளைத் தொடர்ந்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு இருக்கின்றன.

போபால் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நீதிபதி கௌஷ்லேந்திர விக்ரம் சிங், இந்தூர் மாவட்ட நீதிபதி ஆஷேஷ் சிங் ஆகியோர் பாதுகாப்பு காரணங்களுக்காக அந்தந்த நகரங்களுக்கு இதுதொடர்பான உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கின்றனர். ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும், சாலை விபத்து ஏற்பட்டால் மற்றவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

இதுதொடர்பாகப் பேசிய இந்தூர் மாவட்ட நீதிபதி ஆஷிஷ் சிங், “நீதிபதி அபய் மனோகர் சப்ரேவின் அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, ஆகஸ்ட் 1 முதல், ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் பம்புகளில் பெட்ரோல் வழங்கப்படாது என்று ஒரு கட்டுப்பாட்டு உத்தரவை பிறப்பித்துள்ளோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

அரண்டியா பைபாஸில் ஹெல்மெட் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு எரிபொருளை விற்ற பெட்ரோல் பம்ப் ஒன்றிற்கு அதிகாரிகள் சீல் வைத்திருக்கின்றனர், அதுமட்டுமின்றி, அந்த பம்பில் பாதுகாப்பு உபகரணங்கள் பயன்படுத்துவதை வலியுறுத்தும் எந்தஒரு அறிவுப்புப் பலகையும் அங்கில்லை எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய அதிகாரிகள், “துணைப் பிரிவு நீதிபதிகள் தலைமையிலான சிறப்புக் குழுக்கள் மாவட்டம் முழுவதும் உள்ள எரிபொருள் நிலையங்களில் ஆய்வுகளை நடத்தி வருகின்றன. முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதியும் சாலை பாதுகாப்புக் குழுவின் தலைவருமான அபய் மனோகர் சப்ரே இந்த வார தொடக்கத்தில் நடந்த ஒரு கூட்டத்தில், நகரில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் விதிகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதற்கான தீவிர பிரச்சாரத்தை நடத்துமாறு நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். இதனையடுத்து பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 இன் பிரிவு 163 இன் கீழ் ‘ஹெல்மெட் இல்லை, பெட்ரோல் இல்லை’ என்ற தடை உத்தரவை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்தச் சட்டத்தின்படி ஒரு வருடம் வரை சிறைத்தண்டனை, ரூ.5,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்” எனத் தெரிவித்திருக்கின்றனர். இந்த உத்தரவு செப்டம்பர் 29, 2025 வரை அமலில் இருக்கும்.

போபாலில் பெட்ரோல் பம்பில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் ANIயிடம் பேசியபோது, “வாடிக்கையாளர்கள் ஒருவருக்கொருவர் ஹெல்மெட்களை மாற்றிக் கொள்கிறார்கள். அவ்வாறு செய்ய வேண்டாம் என்று நாங்கள் அவர்களிடம் வேண்டுகோள் விடுக்கிறோம். எல்லோரும் ஹெல்மெட் அணியுமாறு நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். அவர்கள் எங்களுடன் வாதிடுகிறார்கள். நாங்கள் ஹெல்மெட் இல்லாமல் பெட்ரோல் கொடுக்கவில்லை, நாங்கள் விதிகளைப் பின்பற்றுகிறோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் சமீபத்தில் இந்தூர் தெருக்களில் போக்குவரத்து விதிகளை வெளிப்படையாக மீறுவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தியது, கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தூர் மாவட்டத்தில் சுமார் 16 லட்சம் இரு சக்கர வாகனங்கள் உட்பட 32 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்தூர் மாவட்டத்தில் தற்போது சுமார் 21 லட்சம் வாகனங்கள் சாலைகளில் ஓடுவதாகவும் கூறப்படுகிறது.