இந்தியா

டெல்லிக்கு இந்த ஆண்டு பட்டாசில்லா தீபாவளி

webteam

நாடு முழுக்க பட்டாசு தயாரிக்க, விற்க தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் அதன் உள் அம்சங்கள் இதனை பிரதிபலிக்கவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பு அமலுக்கு வந்தால் டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள NCR எனப்படும் தலைநகரப் பகுதிகளில் இந்த ஆண்டு தீபாவளி தீபங்களால் மட்டுமே இருக்குமே தவிர பட்டாசு உள்ளதாக இருக்காது. எப்படி என பார்க்கலாமா ?

உச்சநீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில் இரண்டு முக்கிய விஷயங்களை சுட்டிக் காட்டியுள்ளது. டெல்லி உள்ளிட்ட தலைநகரப் பகுதியில் பசுமைப் பட்டாசுகளை மட்டுமே விற்க வேண்டும், வெடிக்க வேண்டும். அடுத்தது பேரியம் கலந்த பட்டாசுகளை பயன்படுத்த கூடாது. பசுமை பட்டாசு என்பதை எப்படி தயாரிக்கலாம் என்பது குறித்து CSIR, PESCO உள்ளிட்ட அமைப்புகளோடு கலந்தாலோசித்து மத்திய அரசு ஆகஸ்ட் மாதம் ஒரு அறிக்கையை உச்சநீதிமன்றம் முன் தாக்கல் செய்தது.

ஆனால் அதன் செயல்பாட்டு வடிவம் என்பது இப்போது வரை வெளியாகவில்லை. அதாவது பசுமைப் பட்டாசை செய்வது என்பது இப்போது வரை ஆராய்ச்சி நிலையிலேயே இருக்கிறது. இதனால் டெல்லிக்கு பட்டாசில்லா தீபாவளி. அடுத்தது பேரியம். அதாவது குழந்தைகள் பட்டாசாக கருதக் கூடிய அல்லது வெடிக்காத கம்பி மத்தாப்பூ, ரோல் போன்றவற்றை பேரியம் கொண்டு மட்டுமே தயாரிக்க முடியும். இவையும் பசுமை பட்டாசுகள் இல்லை என்பதால் தடை கிடைக்கும் என வைத்துக் கொண்டாலும், சற்று மாசு குறைந்த அல்லது வீரியமற்ற இவற்றையும் கூட டெல்லியில் விற்க முடியாது. இதனால் டெல்லி பகுதியில் இந்த ஆண்டு யாரும் பட்டாசோடு தீபாவளி கொண்டாட முடியாது.