இந்தியா

24 மணி நேரத்தில் 10 மாநிலங்களில் யாருக்கும் கொரோனா இல்லை : மத்திய அரசு

24 மணி நேரத்தில் 10 மாநிலங்களில் யாருக்கும் கொரோனா இல்லை : மத்திய அரசு

webteam

கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதுவரை சுமார் 63 ஆயிரம் பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மே 17 வரையிலும் தளர்வுடன் கூடிய பொது முடக்கம் அமலில் உள்ளது. அத்துடன் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் இன்று டெல்லியில் கொரோனா பரிசோதனை மையத்தைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 24 மணி நேரத்தில் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் யாருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்தார்.

அத்துடன் 72 லட்சம் என்95 முகக்கவசங்கள் மற்றும் 36 லட்சம் கொரோனா பாதுகாப்பு கவசங்கள் கூடுதலாக மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார். இந்தியாவில் 4,362 கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளதாகவும், நாட்டில் 3,46,856 பேருக்கு லேசான அறிகுறிகள் தென்படலாம் எனவும் கூறினார்.

இந்தியாவில் இதுவரை 62,939 பேர் கொரோனாவில் பாதிக்கப்பட்ட நிலையில், அதில் 19,358 பேர் சிகிச்சைப் பலன்பெற்று வீடு திரும்பியதாகவும் குறிப்பிட்டார். அதேசமயம் 2,109 பேர் சிகிச்சைப் பலனின்றி இறந்துள்ளதாகவும் தெரிவித்துக்கொண்டார்.