இந்தியா

முதல் டோஸ்க்கு கோவாக்சின் தடுப்பூசி இல்லை, 2வது டோஸ் மட்டுமே செலுத்தப்படும்: டெல்லி அரசு

முதல் டோஸ்க்கு கோவாக்சின் தடுப்பூசி இல்லை, 2வது டோஸ் மட்டுமே செலுத்தப்படும்: டெல்லி அரசு

Veeramani

18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு 1-வது டோஸுக்கு கோவாக்சின் தடுப்பூசி இல்லை, 2 வது டோஸ் மட்டுமே செலுத்தப்படும் என டெல்லி அரசு தெரிவித்துள்ளது.

கோவிட் -19 தடுப்பூசி மையங்களாக செயல்படும் அனைத்து தனியார் மருத்துவமனைகள் மற்றும் நர்சிங் ஹோம்களும் 18-44 வயதுக்குட்பட்டவர்களுக்கு, ஜூன் மாதத்திற்கான இரண்டாவது டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே செலுத்துமாறு டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. அடுத்த உத்தரவு வரும் வரை இதே நடைமுறையை செயல்படுத்த வேண்டும் என்றும் முதல் டோஸ் செலுத்துவதற்கு கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என டெல்லி சுகாதாரத் துறை, அரசு கோவிட் -19 தடுப்பூசி மையங்களுக்கு ஏற்னவே இதேபோன்ற உத்தரவை பிறப்பித்திருந்தது.

கோவாக்சின் தடுப்பூசி தயாரிப்பாளரான பாரத் பயோடெக், மே மாதத்தில் ஐந்து லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகளை வழங்குவதாக வாக்குறுதியளித்ததாகவும், ஆனால் 1.5 லட்சம் டோஸ் மட்டுமே வழங்கியது என டெல்லி அரசு நீதிமன்றத்தில் கூறியது. இந்த விவகாரம் ஜூன் 7 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

இது தொடர்பாக ஆம் ஆத்மி டெல்லி எம்.எல். அதிஷி பேசுகையில், “டெல்லியில் 18 முதல் 44 வயதுக்குட்பட்ட கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இரண்டு வாரங்களாக கையிருப்பில் இல்லை. மத்திய அரசிடமிருந்து தடுப்பூசிகள் ஜூன் 10 ஆம் தேதிதான் கிடைக்கும். 18-44 குழுவில் உள்ள பலருக்கு இரண்டாவது டோஸிற்கான தடுப்பூசி தேதி நெருங்கி வருவதால் இது ஒரு தீவிரமான பிரச்னையாகி வருகிறது. மக்கள் தங்கள் 2வது டோஸ் தடுப்பூசியை பெறுவதற்காக 100-200 கிமீ மீரட், புலந்த்ஷாருக்கு பயணிக்கிறார்கள் என்ற செய்திகளையும் நாங்கள் கேள்விப்படுகிறோம்"என்று கூறினார்.