வேளாண் குடும்பத்தைச் சேர்ந்த ஜெகதீப் தன்கருக்கு எதிரான தீர்மானம் ஒட்டுமொத்த வேளாண் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக உள்ளது என பாரதிய ஜனதா உறுப்பினர் ராதா மோகன் தாஸ் அகர்வால் எதிர்க்கட்சிகளை கடுமையாக விமர்சித்தார். நீரஜ் சேகர் மற்றும் கிரண் சௌத்ரி உள்ளிட்ட பல பாஜக உறுப்பினர்கள் இதே அம்சங்களை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் டெரிக் ஓ' பிரெயின் உள்ளிட்டோர் தங்கள் இருக்கையை விட்டு வெளியேறி முழக்கத்தில் ஈடுபட்ட நிலையில், அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் அவர்களைக் கடுமையாக எச்சரித்தார்.
முன்னெப்போதும் கண்டிராத வகையில் கடும் அமளி நிலவிய சூழலில், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரான மல்லிகார்ஜுன் கார்கே, தன்னை அவைத்தலைவர் மதிக்கவில்லை எனவும் இந்நிலையில் தான் எப்படி அவை தலைவரை மதிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினார். இதற்கு ஆளும் கூட்டணியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் மாநிலங்களவையில் எந்த அலுவலும் நடைபெற இயலாத சூழல் ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து அவைத்தலைவர் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையை திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்தார். வரும் 16,17 தேதிகளில் மாநிலங்களவையில் அரசியல் சாசனம் தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது.
எதிர்க்கட்சி எம்.பிக்கள், மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கோரி மாநிலங்களவை செயலகத்தில் கடிதம் அளித்துள்ளனர். இத்தகைய தீர்மானம் பரிசீலனைக்கு வருவதற்கு குறைந்தபட்சம் 14 நாட்கள் தேவை என்பதால் அதற்குள் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்து விடும் என நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். மேலும் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை உள்ளதால் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என அவர்கள் விளக்கினர்.