இந்தியா

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முடிவு அறிவிப்பதில் கட்சிகள் 'சஸ்பென்ஸ்'

மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம்; முடிவு அறிவிப்பதில் கட்சிகள் 'சஸ்பென்ஸ்'

webteam

மத்திய அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் எதிர்த்து வாக்களிப்பது என சிவசேனா முடிவெடுத்திருந்த நிலையில் திடீரென தனது முடிவை அக்கட்சி நிறுத்தி வைத்துள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசிக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று காலை 11 மணிக்கு மக்களவையில் தொடங்குகிறது. நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது எது போன்ற நிலைப்பாட்டை எடுப்பது என்பது இன்று முடிவு செய்யப்படும் என சிவசேனா தெரிவித்துள்ளது. இதற்கிடையில் சிவசேனா எம்பிக்கள் அனைவரும் இன்று நாடாளுமன்ற அரங்கில் இருக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே உத்தரவிட்டுள்ளார். மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்வபிமானி ஷெத்கரி சங்கேத்தன் கட்சியின் எம்பியான ராஜு ஷெட்டியின் ஆதரவை பெற பாரதிய ஜனதா முயற்சிப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் சிவசேனா கட்சி தனது நிலைப்பாட்டிலிருந்து பின் வாங்கியது. இதற்கிடையில் 18 எம்பிக்களை கொண்ட சிவசேனா கட்சியை தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வைக்க தெலுங்குதேசம் கட்சி முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 


மக்களவையில் நடைபெறும் விவாதத்தில் தங்கள் கட்சி பங்கேற்கும் என்றும் ஆனால் வாக்கெடுப்பில் கலந்து கொள்வது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி எம்பி வினோத்குமார் தெரிவித்துள்ளார். 17 எம்பிக்களை கொண்ட பிஜு ஜனதா தளம் கட்சியும் தீர்மானத்தின் மீது இன்று முடிவெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இதற்கிடையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின்போது பேச ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஆளுங்கட்சியான பாஜகவிற்கு 3 மணி 33 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 38 நிமிடங்களும், அதிமுகவுக்கு 29 நிமிடங்களும், திரிணாமூல் காங்கிரஸுக்கு 27 நிமிடங்களும் தரப்பட்டுள்ளது. பிஜு தனதா தள் கட்சிக்கு 15 நிமிடங்களும், ஷிவ்சேனாவுக்கு 14 நிமிடங்களும் தெலுங்கு தேசம் கட்சிக்கு 13 நிமிடங்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களுக்கு 7 நிமிடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.