உள்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுக்க வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உள்துறை அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பிரதமரை வரவேற்கும் வகையில் பூ, புத்தகம் அல்லது காதி நிறுவனத் தயாரிப்பான கர்சீப்புகள் ஆகியவற்றை கொடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இதை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளும் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சகத்தின் சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்பாக நாட்டு மக்கள் தனக்கு பூங்கொத்து கொடுப்பதற்கு பதிலாக புத்தகங்களைக் கொடுத்து வரவேற்கலாம் என்று பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்திருந்த நிலையில், உள்துறை அமைச்சகம் இந்த சுற்றறிக்கையினை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.