கணினியிலிருந்தும் தகவல்களை பெறும் ‘ப்ளாங்கட் பவர்’ உரிமையை (blanket powers) எந்தவொரு நிறுவனத்திற்கும் மத்திய அரசாங்கம் முழு அனுமதி வழங்கவில்லை எனவும் அவர்கள் ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் அனுமதி வாங்க வேண்டும் எனவும் மூத்த உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து கணினிகளிலும் சேகரிக்கப்படும் விவரங்களை கண்காணிக்கவும், பரிமாற்றம் செய்யப்படும் தகவல்களை இடைமறித்து பார்க்கவும், அதனை தடுக்கவும் 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
உளவுத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ உள்ளிட்ட 10 அமைப்புகளுக்கு உள்துறை அமைச்சகம் இந்த அதிகாரத்தை வழங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் உள்ள எந்தவொரு நபரின் கணினியையும் கண்காணிக்க அந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் நாட்டின் நலன் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.
கணினிக்கு சொந்தக்காரர் அல்லது கணினிக்கு இணைய சேவை வழங்கும் சேவை வழங்குநர், இந்த 10 பாதுகாப்பு அமைப்புகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் எந்த விவரங்களையும் அளிக்க வேண்டும். மீறி அளிக்கத் தவறினால் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இதுபோன்ற கணினி கண்காணிப்புக்கு தடை விதிக்க கோரி வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா, உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், எந்தவொரு கணினியிலிருந்தும் தகவல்களை இடைமறிக்க எந்தவொரு நிறுவனத்திற்கும் மத்திய அரசாங்கம் முழு அனுமதி வழங்கவில்லை எனவும் அவர்கள் ஒவ்வொரு முறை பயன்படுத்தும்போதும் அனுமதி வாங்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், புதிய சட்டங்கள், புதிய விதிகள், புதிய நடைமுறைகள், புதிய நிறுவனங்கள், எதுவும் இல்லை எனவும் ஏற்கனவே உள்ள அதே சட்டம், அதே விதி, அதே செயல்முறை மற்றும் அதே நிறுவனங்களுக்குத்தான் இத்தகைய அனுமதி வழங்கப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே உள்ள விதிகள் மற்றும் விதிமுறைகளில் ஒரு கமாவோ அல்லது முற்றுப்புள்ளியோ கூட மாறவில்லை எனவும் தெரிவித்தார்.
எந்தவொரு இடையூறுக்குமான தகுதிவாய்ந்த அதிகாரம் மத்திய உள்துறை செயலாளர் அல்லது மாநில உள்துறை செயலாளரின் முன் ஒப்புதல் வாங்குவது அவசியம் எனக் குறிப்பிட்டார்.
2009 ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது கணினி தரவுகளை இடைமறிக்கும் மற்றும் கண்காணிப்பதற்கான விதிகளை மத்திய அரசாங்கம் உருவாக்கியது. அங்கீகாரம் பெற்ற மற்றும் நியமிக்கப்பட்ட நிறுவனம் மட்டுமே தொடர்புகளை இடைமறிக்கச் செய்ய முடியும் என தெரிவித்தார்.