இந்தியா

பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை இல்லை: மத்திய அரசு

பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யாதவர்கள் மீது நடவடிக்கை இல்லை: மத்திய அரசு

webteam

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை உரிய கால அவகாசத்துக்குள் வங்கியில் செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யாதவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு உச்சநீதிமன்ற அமர்வில் கூறியுள்ளது. பழைய நோட்டுகள் டெபாசிட் செய்யாத 14 பேர் தொடர்ந்த வழக்குகள் ஒருசேர உச்சநீதிமன்ற அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக சுதா மிஸ்ரா என்பவர் தொடுத்த வழக்கில், கடந்த ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி ஒரே பிரசவத்தில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்ததாகவும், பழைய ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்த டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் இருந்ததால், அறுவை சிகிச்சை செய்துகொண்ட தன்னால் டெபாசிட் செய்ய முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அமர்வு, மத்திய அரசும் ரிசர்வ் வங்கியும் சுதா மிஸ்ராவை பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. இந்த வழக்கின் விசாரணையின்போது மத்திய அரசு, பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட பழைய ரூபாய் நோட்டுகளை உரிய கால அவகாசத்துக்குள் வங்கியில் செலுத்தாதவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது என்று உறுதியளித்துள்ளது.