வங்காள விரிகுடாவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. காரைக்கால் மற்றும் மகாபலிபுரத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை மைய அதிகாரிகள் கணித்திருந்தனர். அதன்படி தற்போது கடலூர் மற்றும் கல்பாக்கத்துக்கு இடையே புயல் கரையை கடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் புதுச்சேரி கரையிலிருந்து நிவர் புயல் சுமார் 85 கிலோ மீட்டர் தூரத்திலும், கடலூரில் இருந்து 80 கிமீ தொலைவில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயலின் மைய பகுதி கரையை கடக்கும் போது 120 முதல் 145 கிமீ வரை காற்று வீசக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நேற்று இரவு முதலே புதுச்சேரியில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. அரசு 144 தடை உத்தரவு போட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் இன்றி புதுச்சேரி நகர வீதிகள் காணப்படுகிறது.